Published : 02 Jun 2018 09:53 AM
Last Updated : 02 Jun 2018 09:53 AM

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைப் போல் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும்: தமிழக முதல்வருக்கு இளைஞர்கள் வேண்டுகோள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை வெறும் 2 ஆண்டுகள் உயர்த்தியதால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போன்று குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் 45 வயது வரை உள்ளவர்களுக்கு தேர்வெழுத குறைந்தபட்சம் ஒரு முறையாவது வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இளைஞர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதிகாரி ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

தேசிய அளவில் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இணையாக தமிழகத்தில் குரூப்-1 தேர்வு கருதப்படுகிறது. இத்தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக துணை ஆட்சியர் பதவியில் சேருபவர்கள் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அதேபோல் டிஎஸ்பி ஆகிறவர்கள் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறுகிறார்கள். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிவாய்ப்பு தவறவிடுவோரின் அடுத்த உடனடி வாய்ப்பாக இருப்பது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுதான்.

தற்போது குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் உள்ளது. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று இளைஞர்கள், கடந்த 7 ஆண்டுகளாக, தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், குரூப்-1, குரூப்-1-ஏ, குரூப்-1-பி ஆகிய தேர்வுகளுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு (ஓசி) 30-லிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 35-லிருந்து 37 ஆகவும் உயர்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று அறிவித்தார்.

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை வெறும் 2 ஆண்டுகள் மட்டும் உயர்த்தியதால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த 2001-2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத் தில் பணி நியமன தடை சட்டம் அமலில் இருந்ததால் குரூப்-1 தேர்வு உட்பட எந்த போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை.

பணிநியமன தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் நலனை கருத் தில் கொண்டு அடுத்து வந்த திமுக ஆட்சியில் (2006 - 2011) குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 5 ஆண்டு தளர்த்தப்பட்டது. ஆனால், அந்த காலகட்டத்தில் குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படவில்லை.

இதனால், வயது வரம்பு தளர்வின் பயனை இளைஞர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெண்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வயது வரம்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் உயர்த்தியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான். அது வும் முதல்தலைமுறைப் பட்டதாரிகள்தான். அவர்களுக்கு குரூப்-1 தேர்வு பற்றிய விழிப்புணர்வு தாமதமாகவே ஏற்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தேர்வுக்கு தயாராகி முயற்சிக்கும்போது வயது வரம்பைக் கடந்து விடுகிறார்கள். எனவே, குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல் தமிழகத்திலும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் என்று முதல்வருக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “தமிழக முதல்வரிடம் நாங்கள் வேலை கேட்கவில்லை. வேலைக்கான தேர்வை எழுத ஒரு வாய்ப்புதான் கேட்கிறோம். தற்போது வயது வரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தியிருப்பது போதாது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும்.

ஒருவேளை வயது வரம்பை 45 ஆக நிரந்தரமாக உயர்த்தாவிட்டாலும் 45 வயது வரை உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது குரூப்-1 தேர்வெழுத வாய்ப்பு அளிக்க வேண்டும். வயது வரம்பை 45 உயர்த்துவதாலோ அல்லது அந்த வயது வரம்புக்குள் இருப்பவர்களுக்கு தேர்வெழுத ஒரு முறை வாய்ப்பு அளிப்பதாலோ யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x