Published : 02 Jun 2018 09:50 AM
Last Updated : 02 Jun 2018 09:50 AM

டிஜிபி, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் புகார் மனு

நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் டிஜிபி அலுவலகம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) மாநில பொதுச் செயலாளர் ராம ரவிக்குமார், டிஜிபி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் கூறினார். நிதி உதவியும் வழங்கினார். கலவரம் ஏற்படுவதற்கான உண்மை நிலையையும் தெரிவித்தார். ஆனால், அவரின் கருத்தை சிலர் திரித்துக் கூறி வருகின்றனர். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே நடிகர் ரஜினிகாந்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் மீது தேவராஜ் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக ரஜினி கூறி உள்ளார். இதுபற்றி அவரிடம் போலீஸார் விசாரிக்க வேண்டும். விசாரணையில் அதுபோன்று எதுவும் இல்லை என்பது தெரியவந்தால் பொய் பிரச்சாரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை துணை ஒருங்கிணைப்பாளரான ச.சுரேஷ் குமார் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையை திசை திருப்பும் வகையில் கருத்துகளை தெரிவிக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x