Published : 02 Jun 2018 09:49 AM
Last Updated : 02 Jun 2018 09:49 AM

அளவுக்கு மேல் மாணவர்களை ஏற்றினால் பர்மிட் சஸ்பெண்ட், வாகனம் பறிமுதல்: போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை

பள்ளி வேனில் 17 மாணவர்கள், ஆட்டோவில் 4 மாணவர்களுக்கு மேல் அழைத்துச் சென்றால் அந்த வாகனங்களின் பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 30,500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி வாகனங்களை தவிர, ஏராளமான மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ, வேன், ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்துகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் பின்பற்ற வேண்டும்.

ஆண்டுதோறும் பள்ளிகளில் ஆய்வு நடத்தும்போது மேற்கண்ட பாதுகாப்பு அம்சங்களில் குறைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு பர்மிட் வழங்கப்படாது என போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்து அதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

இதனால், சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் நிர்வாகம், தங்களிடம் உள்ள பள்ளி வாகனங்களை குறைத்துக் கொண்டன. சில பள்ளிகளில் வாகனங்களின் சேவையை ரத்து செய்து விட்டன. இதனால், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ஆம்னி வேன்களில் நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகளவில் மாணவர்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

நெரிசலில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் ஓட்டுநர் அமரும் இடத்திலும் பள்ளி குழந்தைகளை உட்காரவைத்து கொண்டு செல்கின்றனர்.

இதுகுறித்து ஆட்டோ, ஷேர், வேன் ஓட்டுநர்களிடம் பேசியபோது, அவர்கள் கூறியதாவது: பள்ளி வாகனங்களுக்கு கடுமையான விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால், சில நிர்வாகங்கள் சொந்தமாக வாகனங்களை ஓட்டுவதை நிறுத்தி விட்டனர். இதனால், பெற்றோர்கள் எங்களை போன்ற தனியார் வாகனங்கள் மூலம் குழந்தைகளை பள்ளி அழைத்துச் செல்ல அணுகுகின்றனர். பெட்ரோல், டீசல், உதிரி பொருட்களின் விலை மாதந்தோறும் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், அரசு சொல்கிறபடி குறைந்தளவு மாணவர்களை ஏற்றி சென்றால் எங்களுக்கு கட்டுப்படியாகாது. ஆனால், பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும்போது மிகவும் கவனத்துடன்தான் வாகனங்களை ஓட்டிச் செல்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தி இந்துவிடம் கூறியதாவது: ஆட்டோ உள்ளிட்ட இதர வாகனங்களில் மாணவர்களை அழைத்து செல்வோர், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் முதலில் அவர்களின் எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில், பள்ளியின் பெயர், ஓட்டுநர் பெயர், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், ஆட்டோக்களில் பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு மேல் ஏற்றிச் செல்லக் கூடாது. இதேபோல், பெரிய வேன் வகைகளில் 17 பள்ளி சிறுவர்களுக்கு ஏற்றிச் செல்லக்கூடாது என அரசு உத்தரவு இருக்கிறது.

இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட வாகனங்களின் பர்மிட் சஸ்பெண்ட் செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்வோம். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் திங்கள் (ஜூன் 4-ம் தேதி) முதல் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமை யில் ஆய்வு நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளோம். பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக சென்று வர, நல்ல வாகன ஓட்டுநரைத் தேர்வு செய்ய வேண்டும். அதிக மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களில் தங்களது பிள்ளைகளை பயணம் அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x