Published : 02 Jun 2018 09:41 AM
Last Updated : 02 Jun 2018 09:41 AM

இந்தியாவில் அதிகரித்து வரும் ‘குழந்தை கடத்தல்’: மீட்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

இந்தியாவில் பெண் குழந்தைகள் கடத்தல் சம்பவமும், மீட்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது மனித உரிமை செயற்பாட்டாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

அகில இந்திய அளவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் ரீதியிலான துன்புறுத்தலைச் சந்தித்து வருவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. 18 வயதுக்குட்பட்ட யாவரும் குழந்தைகளே என ஐக்கிய நாடுகள் சபை வரையறை செய்துள்ளது. கடந்த 2016-ல் அகில இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிராக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 958 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.

இதில் 54 ஆயிரத்து 723 வழக்குகள் குழந்தை கடத்தல் சம்பவங்களுக்காகவும், 36 ஆயிரத்து 22 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்காகவும் பதிவாகியுள் ளன என தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரம் தருகிறது. கடந்த 2016-ல் குழந்தைகள் கடத்தல் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவு என இரண்டிலுமே 14 ஆயிரத்து 611 வழக்குகளுடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து 12 ஆயிரத்து 771 வழக்குகளுடன் மகாராஷ்டிரம் இரண்டாமிடத்திலும், 10 ஆயிரத்து 733 வழக்குகளுடன் மத்திய பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளது.

2 மில்லியன் மக்கள் தொகைக்கு மேற்பட்ட சென்னை, கோவையை உள்ளடக்கிய 19 பெருநகரங்களில் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 16 ஆயிரத்து 984 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் டெல்லி முதலிடத்திலும் (7392), மும்பை இரண்டாமிடத்திலும் (3400), பெங்களூரு (1333) மூன்றாமிடத்திலும் உள்ளது.

மீட்கப்படாத சிறுவர், சிறுமியர்

அகில இந்திய அளவில் 70 ஆயிரத்து 394 பெண் குழந்தைகள் / சிறுமிகள், 41 ஆயிரத்து 175 ஆண் குழந்தைகள் / சிறார்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 569 குழந்தைகள் கடந்த 2016-ல் மாயமாகி உள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 34 ஆயிரத்து 814 பெண் குழந்தைகள் / சிறுமிகள் மற்றும் 20 ஆயிரத்து 811 ஆண் குழந்தைகள் / சிறார்கள் என மொத்தம் 55 ஆயிரத்து 625 குழந்தைகள் இதுவரை மீட்கப்படவில்லை என்பதும், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதும் மனித உரிமை செயற்பாட்டாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 16 ஆயிரத்து 881 குழந்தைகளும், டெல்லியில் 14 ஆயிரத்து 661 குழந்தைகளும், மத்திய பிரதேசத்தில் 12 ஆயிரத்து 68 குழந்தைகளும் மாயமாகியுள்ளனர். தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலரும், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநருமான பாடம் ஏ.நாராயணன் கூறும்போது, “கடந்த 2015ம் ஆண்டைக்காட்டிலும், 2016-ம் ஆண்டில் குழந்தைகள் கடத்தல், பாலியல் வல்லுறவு பலமடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகமாக பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மக்கள் தொகை பெருக்கம், நகர மயமாக்கம், போதிய கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பு குறைபாடுகள் போன்றவைதான் குழந்தைகள் கடத்தலுக்கு முக்கியமானவை.

தமிழகத்தில் மனித கடத்தலைத் தடுப்பதற்காக பிரத்தியேக பிரிவு இருந்தாலும் அதற்கென தனியாக ஐஜி அந்தஸ்தில் அதிகாரி இன்னும் நியமிக்கப்படவில்லை. சிபிசிஐடி பிரிவின் அங்கமாக ஏடிஜிபி கட்டுப்பாட்டில் தான் இந்தப் பிரிவு செயல்படுகிறது. இதனால் அப்பிரிவில் உள்ளவர்கள் மாயமானவர்களைத் தேடும் பணியை ஒரு கட்டத்தில் தாங்களாகவே நிறுத்தி விடுகின்றனர்.

பிறக்கும் குழந்தைகளின் கையில் பயோ-மெட்ரிக் டேக் போட வேண்டுமென்பது இன்னும் அறிவிப்பு ரீதியாகவே உள்ளது. ஏழ்மையும், வறுமை யும் குழந்தைகள் கடத்தலுக்கு ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. மக்களைப் பொருளா தார ரீதியாக முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லாவிட்டாலும், அனைத்து மனித உயிர்களுக்கும் உடல்ரீதியாக பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசு இயந்திரங்களின் கடமை. அதை சட்டரீதியாக முழுமையாக செய்ய வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x