Published : 02 Jun 2018 08:06 AM
Last Updated : 02 Jun 2018 08:06 AM

60 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலில் ஒப்படைப்பு

60 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணுக்கு வந்த ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி ஐம்பொன் சிலைகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன், அவரது பட்டத்தரசி உலகமாதேவி ஆகியோரின் சிலைகள், ராஜராஜ சோழனின் படைத்தளபதியும் சேனாதிபதியுமான மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்டன.

தஞ்சாவூர் பெரிய கோயிலின் மூலவரான பெருவுடையாரை நோக்கி வணங்குவது போல வைக்கப்பட்டிருந்த இந்த இரு சிலைகளும் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது.

சென்னையில் விற்பனை

இந்த சிலைகள் கோயிலின் உயர்நிலை நிர்வாகிகள் சிலரால் திருடப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் மூலம் சென்னையில் கவுதம் சாராபாய் என்பவரிடம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதும், தற்போது இச் சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன்- காலிகோ அருங்காட்சியகத்தில் இருப்பதும் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்று அங்குள்ள ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளை மீட்டுக்கொண்டு கடந்த மே மாதம் 28-ம் தேதி சென்னைக்கு வந்தனர்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு, சென்னையில் இருந்து நேற்று காரில் சிலைகள் கொண்டுவரப்பட்டன.

சிலைகள் கொண்டுவரப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் தலைமையில் கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

பகல் 1 மணிக்கு சிலைகள், கும்பகோணம் நீதிமன்றம் அருகே உள்ள பக்தபுரி தெரு ரவுண்டானாவை வந்தடைந்தபோது கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை, ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து சிலைகளுக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, சிவனடியார்கள் திருக்கயிலாய வாத்தியங்களை இசைத்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர், இரு சிலைகளையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சிலைகளை போலீஸார் அளித்தனர். அவற்றைப் பார்வையிட்ட நீதிபதி, சிலைகளை அறநிலையத் துறையினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சிலைகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன் பெற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து இரு சிலைகளும் திருவையாறுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு உலகமாதேவி கட்டிய வடகயிலாயம் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின், தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டு கோயிலின் அர்த்த மண்டபத்தில் பெருவுடையாருக்கு எதிரில் வைக்கப்பட்டன. சிலைகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றன. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

விலை மதிக்க முடியாதவை

இந்த சிலைகள் மீட்கப்பட்டது குறித்து ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியபோது, “பிரசித்தி பெற்ற ராஜராஜசோழனின் சிலையும், அவரது பட்டரத்தரசி சிலையும் காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, 3 மாதங்களில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகளைக் கடத்தியவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 100 வயதாக இருந்தாலும் சரி விசாரணை மூலம் கண்டறியப்பட்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பேன்” என்றார்.

சிலைகளின் பாதுகாப்புக்கு இரவு, பகலாக ஷிப்ட் முறையில், துப்பாக்கி ஏந்திய 6 போலீஸாரை நியமிக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமாரிடம், ஐஜி பொன் மாணிக்கவேல் நேற்று உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x