Published : 02 Jun 2018 08:03 AM
Last Updated : 02 Jun 2018 08:03 AM

டாஸ்மாக் மதுக்கடை திறப்பு விவகாரம்: அமைச்சருடன் கடும் வாக்குவாதம்; டிடிவி தினகரன் வெளிநடப்பு

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக மது விலக்கு, ஆயத் தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் பேரவையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய தினகரன், ‘‘மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என கடந்த 2016 தேர்தலின்போது ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகளை மூடினார். முதல்வர் பழனிசாமியும் 500 கடைகளை மூடினார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன. ஆனால், அதில் 810 கடைகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா வழியில் நடக்கும் அரசு என சொல்லும் நீங்கள் இப்படி செய்யலாமா?’’ என்றார்.

அதற்குப் பதிலளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, ‘‘படிப்படியாக மதுக் கடைகள் மூடப்பட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் கொள்கை. ஜெயலலிதா வழியில் செயல்படும் நாங்கள் சுமார் 3 ஆயிரம் கடைகளை மூடியுள்ளோம். 2002-லிருந்து 25 சதவீத மது ஆலைகளை உங்கள் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா கொள்கையை ஏற்பதாக இருந்தால் மது ஆலைகளை மூடியிருக்க வேண்டும். மது ஆலை வருமானமும் வேண்டும். இங்கே வந்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். இது நியாயமா?’’ என்றார். அமைச்சருடன் தினகரன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தினகரன் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார். அதனைக் கண்டித்து தினகரன் வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘‘நான், மனைவி, மகள் மூவரும்தான் எனது குடும்பம். நாங்கள் மது ஆலைகளை நடத்தவில்லை. எனது உறவினர்கள் நடத்துவதாக வைத்துக் கொண்டால் கூட அந்த ஆலைகளில் இருந்து மதுபானங்களை ஏன் வாங்குகிறீர்கள். 810 மதுக்கடைகளை மீண்டும் திறப்பது ஏன் என்று கேட்டால் அமைச்சர் தேவையில்லாததை பேசுகிறார். பதிலளிக்க எனக்கு வாய்ப்பும் தருவதில்லை. எனவே வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x