Published : 02 Jun 2018 08:01 AM
Last Updated : 02 Jun 2018 08:01 AM

ஆளுநர் பன்வாரிலாலுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்த பொன்.ராதாகிருஷ்ணன் ஆளுநர் மாளிகை சென்று அவரைச் சந்தித்தார். சுமார் அரை மணி நேர சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்கள் மக்களுக்கு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசு என்ன கொடுக்கப் போகிறது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் பயங்கரவாதிகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. அந்த கோணத்தில் விசாரணையும் நடந்து வருகிறது. அரசும், முதல்வரும் சம்பவத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கூறியுள்ளனர். அரசு இவ்வாறு கூறிய பிறகும் அவர்களை வளர விட்டதற்காக ஏன் திமுக கண்டிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் அவர் விமானம் மூலமாக மதுரை புறப்பட்டு சென்றார். ஆனால் ஆளுநருடனான சந்திப்பின்போது தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசிக் கொண்டதாக பாஜகவினர் தரப்பில் தெரிவிக் கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x