Published : 01 Jun 2018 08:09 PM
Last Updated : 01 Jun 2018 08:09 PM

கச்சநத்தம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்

கச்சநத்தம் தாக்குதலில் காயமடைந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, அவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழா தொடர்பான முன்பகை காரணமாக ஒரு பிரிவினர் மீது அடுத்த கிராமத்தில் வசிக்கும் மற்றொரு தரப்பினர் நடத்திய தாக்குதலில் இறந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்திருக்கிறது. மனிதநேயமின்றி அரங்கேற்றப்பட்டுள்ள இந்த கொடூர படுகொலைகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன; இவை கண்டிக்கத்தக்கவையாகும்.

கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்புக்கும் இடையே முன்பகை நிலவி வந்தது காவல்துறையினருக்கு நன்றாகத் தெரியும். கடந்த மே 28-ம் தேதி இரவு கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக அதற்கு முந்தைய நாளே சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இதற்காக இருபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் திரட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்த உண்மைகளை உளவுப்பிரிவு மூலம் கண்டறிந்து இந்தப் படுகொலைகளைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் காவல்துறை அதன் கடமையில் தோல்வியடைந்து விட்டது.

கொல்லப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்; வழக்கு விசாரணையை உள்ளூர் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த மக்கள் மதுரையில் நான்காவது நாளாக இன்றும் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அமைச்சரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்த 5 பேரில் மூவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, அவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். அதுமட்டுமின்றி, கச்சநத்தம் பகுதியில் இனியும் மோதல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, கச்சநத்தம் உட்பட இரு தரப்பு மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x