Published : 01 Jun 2018 07:04 PM
Last Updated : 01 Jun 2018 07:04 PM

தூத்துக்குடியில் தொடரும் கைது நடவடிக்கைகள்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்கும் வகையில் நடத்தப்படும் கைது படலத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் பல மாதங்களாப் போராடி வந்த நிலையில் தமிழக அரசு போராடியவர்களை அடக்கிட துப்பாக்கிச் சூட்டினை நடத்தி 13 பேர் உயிரைப் பறித்தது. நூற்றுக்கணக்கானோர் தடியடி மற்றும் குண்டு காயங்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், மக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறிக்கொண்டே, மறுபுறத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தோடு அப்பாவி பொதுமக்களையும், இளைஞர்களையும் இரவோடு இரவாக வீடு வீடாகச் சென்று மிரட்டியும், பயமுறுத்தியும், கைது செய்து வருகிறது. தமிழக அரசின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையால் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்கு மாறாக மீண்டும் பதட்ட நிலை உருவாக்கப்படுகிறது.

தமிழக அரசின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பழிவாங்கும் வகையில் நடத்தப்படும் கைது படலத்தை உடனடியாக நிறுத்திட வேண்டுமெனவும், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும், தமிழக அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

வேல்முருகன் கைதுக்கு கண்டனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு மே 26-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (மே 31 அன்று) தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x