Published : 01 Jun 2018 05:14 PM
Last Updated : 01 Jun 2018 05:14 PM

குரூப் 1 தேர்வுக்கான வயது உச்ச வரம்பு அதிகரிப்பு: 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்குபெறுவதற்கான வயது உச்ச வரம்பினை உயர்த்திடுமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அதன் அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு உள்ள வயது உச்சவரம்பினைப் போல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, 1-ஏ, 1-பி பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்சி/எஸ்டி/எம்பிசி/பிசி மற்றும் டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 35-லிருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பு 30-லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுகிறது” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வின் மூலம், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1-ஏ பிரிவின் கீழ் வன பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1-பி தேர்வின் மூலம் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் பணியிடம் நிரப்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x