Published : 01 Jun 2018 02:33 PM
Last Updated : 01 Jun 2018 02:33 PM

சென்னை உணவகத்தில் விட்டுச்சென்ற ரூ.25 லட்சம்; புகார் அளிக்க வராத நபர்கள்: நேர்மையாக ஒப்படைத்த சர்வருக்கு பாராட்டு

அண்ணாநகரில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட வந்தவர்கள் ரூ.25 லட்சம் ரொக்கப்பணத்தை பிளாஸ்டிக் பையில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். பணத்தை கேட்டும் வரவில்லை. பணத்தை எடுத்த சர்வர் அதை நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

அண்ணா நகர் முதல் பிரதான சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் நேற்று இரண்டு பேர் உணவருந்த வந்தனர். அவர்கள் கையில் ஒரு பிளாஸ்டிக் பேக்கை கொண்டுவந்தனர். அதை சாப்பிட வந்தவர்களில் ஒருவர் தனது முதுகுக்கு பின்னால் வைத்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

பின்னர் சாப்பிட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் செல்லும்போது பிளாஸ்டிக் கவரை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அதன் பின்னர் அங்கு வந்த சர்வர் ரவி இருக்கையில் பிளாஸ்டிக் கவர் இருப்பதை பார்த்துள்ளார்.

அதை எடுத்து சோதித்தபோது அதனுள் கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அதை நேர்மையாக உணவக மேலாளர் விபரத்தை கூறி ஒப்படைத்துள்ளார்.

பிளாஸ்டிக் பையில் ரூ.25 லட்சம் பணம் இருந்ததால், உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். கேமரா பதிவில் 2 பேர் உணவ்ருந்த வருவதும், வெள்ளை சட்டை போட்ட ஒருவர் அவரது முதுகுக்கு பின்னால் கவரை வைத்துவிட்டு உணவு அருந்துவதும், பின்னர் செல்போனில் பேசியபடி அவர் பையை எடுக்காமல் மறந்து செல்வதும் பதிவாகி இருந்தது.

சாப்பிட வந்தவர் பணத்தை மறதியாக விட்டுச்சென்றிருக்கலாம் அவர் வந்து கேட்டால் விசாரித்து எழுதி வாங்கி கொடுத்துவிடுவோம் என்று மேலாளரும், ரவியும் முடிவு செய்து தங்களது நிர்வாகத்தில் தெரிவித்துவிட்டு காத்திருந்துள்ளனர். ஆனால் பணத்தை தேடி நேற்றிரவு வரை யாரும் வரவில்லை.

இதனால் இனியும் இவ்வளவு பெரிய தொகையை கையில் வைத்திருக்க கூடாது என முடிவு செய்த உணவக மேலாளர்,  சர்வர் ரவியை அழைத்துக்கொண்டு இன்று அண்ணா நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து ரூ.25 லட்சம் ரொக்கப்பணத்தை ஒப்படைத்தனர். ஹோட்டலில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஒப்படைத்தனர்.

பணத்தை பெற்ற அண்ணாநகர் காவல் ஆய்வாளர் சரவணன், பணத்தை நேர்மையாக எடுத்து வந்து காவல்துறையில் ஒப்படைத்த சர்வர் ரவியின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். கடந்த 15 ஆண்டுகளாக அதே உணவகத்தில் சர்வராக பணியாற்றும் ரவியின் நேர்மையை பாராட்டி அவருக்கு சூப்பர்வைசராக பதவி உயர்வை ஓட்டல் நிர்வாகம் அளித்துள்ளது.

போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ. 25 லட்சம் பணத்தை விட்டுச் சென்றவர்கள் வேறு ஏதேனும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்களா? என்று போலீஸார் விசாரித்தபோது எங்கும் புகார் அளிக்கவில்லை என்பது தெரியவந்தது. உணவகத்துக்கும் திரும்பி வந்து பணத்தை கேட்கவில்லை.

ஆகவே அது ஹவாலா பணம் போன்று பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீஸில் புகார் அளிக்க முடியாத பணமாக இருக்கலாம் என்று கருதும் போலீஸார், அவர்களை பிடித்து விசாரிக்க முடிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து, உணவகத்தில் பணத்தை விட்டுச்சென்ற ஆட்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x