Last Updated : 01 Jun, 2018 02:10 PM

 

Published : 01 Jun 2018 02:10 PM
Last Updated : 01 Jun 2018 02:10 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு போலீஸார் தொந்தரவு தரக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு போலீஸார் தொந்தரவு தரக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கப்பாண்டி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் நெல்லை மாவட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். மே 22 ஆம் தேதி நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த போராட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் பல பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கும் பொருட்டு அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை போலீஸார் விசாரணை என்ற பெயரில் நள்ளிரவு நேரங்களில் கூட துன்புறுத்தல் செய்கின்றனர். மேலும் போலீஸார் விசாரணை என்ற பெயரில் தங்களது குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கைக்குழந்தைகளை துன்புறுத்துகின்றனர்.

குறிப்பாக மக்கள் அதிகார அமைப்பினைச் சேர்ந்த சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்களை போலீஸார் மனிதாபிமானம் இன்றி விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சட்ட விரோதமாக யாரையும் கைது செய்யக் கூடாது, துன்புறுத்தக் கூடாது, விசாரணை தொடர்பாக எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசாரணை என்ற பெயரில் போலீஸார் தொந்தரவு தரக்கூடாது என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x