Published : 01 Jun 2018 10:18 AM
Last Updated : 01 Jun 2018 10:18 AM

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட இயக்குநர் சான்று பெற சுங்கத்துறையின் புதிய செயலி அறிமுகம்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார இயக்குநர் சான்றிதழ் பெற உருவாக்கப்பட்டுள்ள சென்னை சுங்கத்துறையின் புதிய செயலியை தலைமை ஆணையர் எம்.அஜித்குமார் நேற்று அறிமுகம் செய்தார்.

சென்னை சுங்கத்துறை அலுவலகம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகளை எளிதாக்குவது தொடர்பான ‘எதிர்காலத்துக்கான பாதை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு மயிலாப்பூரில் நேற்று நடந்தது. சென்னை சுங்கத்துறை தலைமை ஆணையர் எம்.அஜித்குமார் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் செய்வோர் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார இயக்குநர் சான்றிதழ் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியை (AEO) அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் எம்.அஜித்குமார் பேசியதாவது:

நாட்டிலேயே சென்னை சுங்கத்துறை சிறப்பாக செயல்படுகிறது. ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார இயக்குநர் சான்றிதழை எளிமையாகவும், விரைவாகவும் பெறும் வகையில் தற்போது புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் சேவையைப் பெற ஆரம்பத்தில் 60 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். தற்போது, இந்த எண்ணிக்கை 1,080 ஆக அதிகரித்துள்ளது.

இதில், 315 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 310 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த புதிய முறையால் வர்த்தகர்கள் தங்களது வியாபாரப் பணிகளை விரைவாக செய்ய முடியும். அதேபோல், அவர்களது வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடியும் என்றார்.

‘தி இந்து’ குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி என்.நம்பிராஜன் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “தொழில்துறையில் டிஜிட்டல் மயமாக்கல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 1991-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின்படி தொழில்துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாகியுள்ளன. சென்னை சுங்கத்துறையால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து வருவதால், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க முடியும்” என்றார்.

இந்தக் கருத்தரங்கில் தென்னிந்திய தொழில், வர்த்தக சபைத் தலைவர் ரபீக் அஹமத், டெல் நிறுவன இயக்குநர் நவநீத் கேஜ்ரிவால், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (தென்மண்டலம்) இயக்குநர் கே.உன்னிகிருஷ்ணன் பங்கேற்றனர். நிறைவாக சென்னை சுங்க முகவர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.என்.சேகர் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x