Published : 01 Jun 2018 10:13 AM
Last Updated : 01 Jun 2018 10:13 AM

வீடுகளின் கூரையில் விழும் மழைநீரை கோயில் குளங்களில் சேமிக்க நடவடிக்கை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

வீடுகளின் மேற்கூரையில் விழும் மழைநீரை நேரடியாக கோயில் குளங்களுக்கு கொண்டு வந்து சேமிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குளங்கள், ஏரிகள் என மொத்தம் 206 நீர்நிலைகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 32 நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் நீர்நிலைகளை சீரமைக்க, பல்வேறு தொழிற்சாலைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 19 நீர்நிலைகளும், ரோட்டரி சங்கங்கள் சார்பில் 2 நீர்நிலைகளும் சீரமைக்கப்பட உள்ளன.

இதற்கிடையில், சென்னை மாநகரப் பகுதிகளில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 15 கோயில் குளங்களை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தும் வகையில், நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கத்தை தமிழக அரசு அறிவித்தது. அத்திட்டத்தின் கீழ் சீரமைக்க, மயிலாப்பூர் விருப்பாட்சீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், ராயபுரம் அங்காளபரமேஸ்வரி கோயில், அயனாவரம் காசி விஸ்வநாத சுவாமி கோயில் உட்பட 15 கோயில்களின் குளங்களை தேர்வு செய்துள்ளோம். அவற்றை ரூ.2 கோடியே 28 லட்சம் செலவில் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் அனைத்து கோயில் குளங்களிலும் உள்ள குப்பைக் கழிவுகள் அகற்றப்படும். அவை தூர் வாரப்பட்டு, குளத்தின் ஆழத்தை அதிகரித்து, நீரின் கொள்ளளவு அதிகரிக்கப்படும். குளக்கரைகள் பலப்படுத்தப்படும். நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த, குளத்தினுள் மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்படும்.

சாலைகளில் வரும் அசுத்தமான மழைநீரை குளத்தில் விட முடியாது. அதனால், அந்தந்த குளங்களைச் சுற்றியுள்ள வீடுகளின் மேற்கூரைகளில் இருந்து சேகரிக்கப்படும் மழைநீரை நேரடியாக குளத்துக்கு கொண்டுவந்து விட திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் மழைநீரும் சேமிக்கப்படும். கோயில் குளங்களின் தூய்மையும் உறுதிசெய்யப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x