Last Updated : 01 Jun, 2018 09:54 AM

 

Published : 01 Jun 2018 09:54 AM
Last Updated : 01 Jun 2018 09:54 AM

எம்எஸ்எம்இ-டிஐ நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் 85 கல்லூரிகளில் ‘உதவி மையங்கள்’ அமைப்பு: புதிய தொழில் யோசனைகள் வைத்திருப்பவர்களுக்கு அழைப்பு

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும் 85 கல்லூரிகளில் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய தொழில் யோசனைகளை உருவாக்குபவர்கள் உள்ளி்ட்டவர் களுக்கு உதவுவதற்காக உதவி மையங்கள் (இன்குபேஷன் சென்டர்) ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மாணவர்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் புதிய தொழில் யோசனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை வைத்திருந்தால் அவர்கள் இந்த உதவி மையத்தை நாடி பயன் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள் ளது.

சென்னையில் உள்ள மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம் (எம்எஸ்எம்இ – டிஐ) கடந்த 1954-ம் ஆண்டு, மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டது. இந்நிறுவனம், திறமை யான தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோரை உருவாக்குதல், தொழில் நிறுவனங் களுக்குத் தேவையான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பெண்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

இதைத் தவிர, உற்பத்தியாளர், விற்பனையாளர் சந்திப்பு, சந்தைப்படுத்துவதற்கான உதவிகள், தொழில்நுட்ப உதவிகள், தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்க உதவுதல், தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான கள ஆய்வுகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை யும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய தொழில் யோசனைகளை உருவாக்குபவர்கள் உள்ளி்ட்டவர்களுக்கு உதவு வதற்காக எம்எஸ்எம்இ நிறுவனம் சார்பில், கல்லூரிகளில் புதிய தொழி்ல் தொடங்குவதற்கான உதவி மையங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, எம்எஸ்எம்இ வளர்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் வி.ராமகிருஷ்ணன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தற்போதைய இளைஞர்கள் படிப்பை முடித்த உடன் வேலை தேடாமல் பலர் சுய தொழிலில் ஈடுபடுகின்றனர். நல்ல தொழில் யோசனை மற்றும் திறன் இருந்தும்கூட பலரால் தொழில் தொடங்க முடியவில்லை. குறிப்பாக, சமூகத்துக்குப் பயன்படும் வகையில் புதிய பொருட்களைக் கண்டுபிடித்தல், புதிய தொழில் யோசனைகளை உருவாக்குபவர் கள் உள்ளி்ட்டவர்களுக்கு உதவுவதற்காக எம்எஸ்எம்இ நிறுவனம் சார்பில், கல்லூரிகளில் புதிய தொழி்ல் தொடங்குவதற் கான உதவி மையங்களை (இன்குபேஷன் சென்டர்) ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் 250 கல்லூரிகளில் இந்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 85 கல்லூரிகளில் இந்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் எம்ஜிஆர் பல்கலைக்கழகம், ஆர்எம்கே, சாய் ராம் மற்றும் சவீதா பொறியியல் கல்லூரிகள், வேலூரில் விஐடி பல்கலைக்கழகம், கோவையில் பிஎஸ்ஜி மற்றும் ஆர்எம்கே பொறியியல் கல்லூரிகள், திருநெல்வேலியில் நேஷனல் என்ஜினியரிங் கல்லூரி, மதுரையில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி, திருச்சியில் என்ஐடி, சேலத்தில் விநாயகா மிஷன் உள்ளிட்ட கல்லூரிகள் இவற்றுள் முக்கியமானவை ஆகும்.

75 - 85% நிதியுதவி

இங்கு புதிய தொழில் யோசனைகள், புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட திட்டங்களைச் செயல் வடிவம் கொடுப்பதற்காக ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும். அத்துடன், நிதியுதவிகள் உள்ளிட்டவை வழங்கப் படும். ஒவ்வொரு திட்டத்துக்கும் (புராஜெக்ட்) 75 முதல் 85 சதவீதம் நிதியுதவி வழங்கப்படும். அதாவது, ரூ.6.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வழங்கப்படும்.

புதிய கண்டுபிடிப்புகள், தொழில் யோசனைகள் மின் சாரம், தொழி்ல்நுட்பம், பொறியியல், எலக்ட்ரானிக்ஸ், உணவுப் பொருட்கள், மதிப்புக் கூட்டு சேவைகள் என எந்தத் துறை யைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், ஒரே நிபந்தனை, கண்டுபிடிப்புகள், தொழில் யோசனைகள் புதிதாக இருக்க வேண்டும். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாற் றாக உள்நாட்டிலேயே தயாரிப் பதற்கான கண்டுபிடிப்புகளுக் கும் இந்த மையம் மூலம் உதவி பெறலாம்.

மாணவர்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் புதிய தொழில் யோசனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை வைத்திருந்தால் அவர்கள் இந்த உதவி மையத்தை நாடிப் பயன் பெறலாம். இதுகுறித்து, கூடுதல் விவரங்களைப் பெற எங்கள் அலுவலகத்தை (தொலைபேசி எண்.044-22501011/12/13) தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x