Published : 01 Jun 2018 08:23 AM
Last Updated : 01 Jun 2018 08:23 AM

நாட்டில் முதல்முறையாக கோவையில் புகையிலை தீமைகளை விளக்கும் மின்னணு கையேடு வெளியீடு

இந்தியாவிலேயே முதல்முறையாக புகையிலையால் ஏற்படும் தீமைகளை விளக்கும் மின்னணு கையேடு (டிஜிட்டல் பாம்ப்லெட்) கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில், மின்னணு கையேட்டை கோவை மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.லட்சுமி வெளியிட்டார்.

அவர் பேசும்போது, ‘மனிதர்கள் போதை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகும்போது, மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். போதையால் தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே, போதைப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்' என்றார்.

70 லட்சம் பேர் உயிரிழப்பு

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மைய ஆராய்ச்சி நிலைய இயக்குநர் டாக்டர் பி.குகன் பேசியதாவது: ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம். புகையிலைப் பழக்கத்தால் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் நோய்கள் வர வாய்ப்புள்ளன.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். கோவை மண்டலத்தில் சுமார் 86 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில், 140 பேருக்கு வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு புகையிலைப் பழக்கமே முக்கிய காரணம்.

நடப்பாண்டு, இந்தியாவிலேயே முதல்முறையாக புகையிலையால் ஏற்படும் தீமைகளை விளக்கும் மின்னணு கையேட்டை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்டுள்ளோம்.

இந்த கையேட்டில் உள்ள ‘க்யூஆர் கோடை’ ஸ்மார்ட் போன் அல்லது ஆன்ட்ராய்டு செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால், ஐந்து இணைப்புகள் உள்ள வலைதள பக்கங்களைக் காணலாம். இந்த இணைப்புகள் புகையிலையால் ஏற்படும் தீமைகள் மற்றும் புற்றுநோய் குறித்த விவரங்களைக் கொண்ட வீடியோ மற்றும் படங்களின் தொகுப்புகளாக உள்ளன.

இந்த தகவல்களை உலகெங்கும் கொண்டுசென்று, மக்களுக்கு புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் நோக்கமாகும். புகை மற்றும் புகையிலைப் பழக்கத்துக்கு உள்ளானவர்களை, சிறிது சிறிதாக விடுவிக்கவும் இது உதவும். மேலும், புற்றுநோய் தொடர்பான சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பினால், உடனடியாக பதில் அனுப்பிவைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். அண்டு சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயகுமார், இணை நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் கே.கார்த்திகேஷ் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x