Published : 01 Jun 2018 08:18 AM
Last Updated : 01 Jun 2018 08:18 AM

தூத்துக்குடி விவகாரத்தில் பேசியது ரஜினியின் சொந்த குரலா?: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

ரஜினி கூறியது அவரது சொந்த குரலா என்பதில் சந்தேகமாக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் இன்று நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து திருவாரூர் சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வழியில் புதுச்சேரியில் சிறிது நேரம் தங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது அவருடைய சொந்த குரலா? என்பது சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இதன் பின்னணி குரலாக, ஏற்கெனவே பாஜக இதையே சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கும் அதிமுக.வும் இதை சொல்லிக் கொண்டிருக்கிறது. எனவே, ரஜினியின் குரல் அந்தக் குரலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது.

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்

எது எப்படி இருந்தாலும், ‘அவர் ஒரு சூப்பர் ஸ்டார்’. அவரே, தீவிரவாதிகள் எனக்கு தெரியுமென்று சொல்லியிருக்கின்ற காரணத்தால், அந்த தீவிரவாதிகள் யார் என்பதை அவர் நாட்டுக்கு அடையாளம் காட்டினால், நாட்டுக்கு அது நல்லதாக அமையும். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

போராட்டங்களை விமர்சித்துப் பேசியிருக்கிறார். வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். போராட்டமில்லாமல் எந்தவொரு காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டமாக இருந்தாலும் சரி, எல்லாமே போராட்டங்கள் நடத்தியே காரியங்கள் சாதிக்கப்பட்டிருக்கின்றன. இது ரஜினிக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

மாணவர்கள் வர வேண்டும்

திருவாரூர் அருகே தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின், “அரசியல் துறைக்கும் மாணவர்கள் வரவேண்டும். போராட்டமே வேண்டாம், போராட்டத்தால் நாடே சுடுகாடாகிவிடும் என்று சொல்கின்றவர்களும் உள்ளனர். ஆனால் போராட்டம்தான் வாழ்க்கை, இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க நமது தலைவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இவற்றையெல்லாம் சிந்தித்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க மாணவர்கள் முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x