Published : 01 Jun 2018 08:15 AM
Last Updated : 01 Jun 2018 08:15 AM

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் 7 பேரது உடல்களுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை தொடங்கியது: பலத்த பாதுகாப்புடன் உடனுக்குடன் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரது உடல்களை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மறு பிரேத பரிசோதனை செய்யும் பணி நேற்று தொடங்கியது. நேற்று இரவு வரை 2 உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. உடனுக்குடன் அவை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தூத்துக்குடியில் கடந்த 22, 23-ம் தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இதில், போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில், செல்வசேகர், கந்தையா, ஸ்னோலின், காளியப்பன், சண்முகம், தமிழரசன், கார்த்திக் ஆகிய 7 பேரது உடல்கள் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பதப்படுத்தி வைக்கப்பட்டன.

மற்றவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் ஒப்புதல் கொடுக்காததால் அவை பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

மறு பிரேத பரிசோதனை

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரது உடல்களை எய்ம்ஸ், ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் மற்றும் நச்சுயியல் துறை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர், நேற்று காலை 11 மணி அளவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து, மருத்துவர்கள் மற்றும் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

5 மணி நேரம்

பின்னர், மறு பிரேத பரிசோதனை பணிகள் தொடங்கின. தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்ற நடுவர் அண்ணாமலை முன்னிலையில், டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா, தூத்துக்குடி தடயவியல் மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் பணியைத் தொடங்கினர்.

முதலாவதாக தூத்துக்குடி மாசிலாமணி புரத்தைச் சேர்ந்த சண்முகம் (40) என்பவரது சடலம் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டு காயங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டன. மேலும், உடல் முழுவதும் 18 எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டன. பின்னர், பிரேத பரிசோதனை நடைபெற்றது. முழு நடவடிக்கையும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

பகல் 1 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது. மாலை 5 மணியளவில்தான் பிரேத பரிசோதனை முடிந்தது. பின்னர், உடல் அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. வட்டாட்சியர் நிலை அலுவலர் மற்றும் டிஎஸ்பி தலைமையிலான 100 போலீஸாரின் பாதுகாப்புடன், சண்முகத்தின் உடல் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

2-வது உடல்

தொடர்ந்து, சாயர்புரம் அருகே இருவப்பபுரத்தைச் சேர்ந்த ப.செல்வசேகர் (55) என்பரது உடலை, தூத்துக்குடி 3-வது நீதித்துறை நடுவர்மன்ற நடுவர் தமிழ்செல்வி முன்னிலையில் அதே மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இரவில் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 3-வதாக கார்த்திக் என்பவரின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யாத கிளாட்சன், மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித்குமார், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 6 பேரது உடல்களும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரு வாரம் பாதுகாப்பாக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x