Published : 01 Jun 2018 08:10 AM
Last Updated : 01 Jun 2018 08:10 AM

நெல்லை, திருச்சி, சேலத்தில் மாதிரி பேரவை கூட்டம்: சட்டப்பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி தகவல்

சென்னையை தொடர்ந்து திருநெல்வேலி, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிமுக அரசின் முகமூடியை தோலுரித்துக் காட்ட வரும் 5-ம் தேதி திருநெல்வேலி பாளையங்கோட்டை வி.எம்.எஸ். திருமண மண்டபம், 8-ம் தேதி திருச்சி கரூர் புறவழிச்சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம், 12-ம் தேதி சேலம் இரும்பாலை சாலை எம்.எஸ்.வி. திருமண மண்டபம் ஆகிய இடங்களில் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் இதில் பங்கேற்பார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 29-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. அப்போது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும். அதுவரை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திமுக பங்கேற்காது’’ என அறிவித்தார்.

97 எம்எல்ஏக்கள் பங்கேற்பு

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. திமுக கொறடா அர.சக்கரபாணி பேரவைத் தலைவராக செயல்பட்ட இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்பட 97 பேர் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய காங்கிரஸ் கொறடா எஸ்.விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் ஆகியோர், ‘‘பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களை பேரவைக்கு வருமாறு பேரவைத் தலைவரும், முதல்வரும் அழைக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களுக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், ‘‘திமுக உறுப்பினர்களை பேரவைத் தலைவர் வெளியேற்றவில்லை. எனவே, அவர்கள் சட்டப்பேரவைக்கு வர எந்தத் தடையும் இல்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x