Published : 01 Jun 2018 08:01 AM
Last Updated : 01 Jun 2018 08:01 AM

7 ஆண்டுகளில் 13,287 மெகவாட் கூடுதல் மின்திறன்; தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது: பேரவையில் அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்

சட்டப்பேரவையில் நேற்று மின்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ல் பதவியேற்றபோது தமிழகத்தில் 8 முதல் 10 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. அதனால் புதிதாக தொழில் தொடங்கத் தயங்கினர். மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தை மிகை மின் மாநிலம் ஆக்கிக் காட்டுவேன் என்று தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்தார். அதுபோலவே மின்திறனை அதிகரித்து, 2015 ஜூன் 5-ம் தேதிமுதல் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்ற நிலையை உருவாக்கினார்.

கடந்த 7 ஆண்டுகளில் 13,287 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்திறன் நிறுவப்பட்டுள்ளது. மேலும், 6,600 மெகாவாட் மின்திறன் கொண்ட புதிய திட்டப் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் 2020-ம் ஆண்டு முடிவடையும். இதனால், இப்போது மட்டுமல்ல; தமிழகத்தில் இனி ஒருபோதும் மின்வெட்டு இருக்காது.

ஒரேநாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 3,16,186 பேருக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 7 நாட்களில் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 24,298 சிறிய தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளோம். தத்கால் திட்டத்தில் விவசாயிகள் உட்பட 30,835 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 24 சதவீத மின் நுகர்வோர் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவதால் மாதம் ரூ.500 கோடி வசூலாகிறது. இந்த நிதியாண்டில், வசூலிக்கப்படும் மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆன்லைனில் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 7.94 லட்சம் பேருக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கிய மின்துறையின் தற்போதைய நஷ்டம் ரூ.2,975 கோடியாகக் குறைந்துள்ளது. விரை வில் இது லாபத்தில் இயங்கும்.

மின் விபத்தை தடுக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மின் தரத்தை மேம்படுத்தவும் சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளை ரூ.2,549 கோடியில் மத்திய மின்விசை நிதி நிறுவன உதவியுடன் புதைவடங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் 2020-21ல் முடிவடையும். புயலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய கடலோர நகரங்களான வேளாங்கண்ணி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.360 கோடியில் உயர் அழுத்த, தாழ்வழுத்த மின்பாதைகள் புதைவடங்களாக மாற்றப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x