Published : 01 Jun 2018 07:47 AM
Last Updated : 01 Jun 2018 07:47 AM

குஜராத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு

குஜராத்தில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் ராஜராஜ சோழன், அவரது பட்டத்தரசி உலகமாதேவி ஆகியோருக்கு, அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பெரிய கோயிலுக்கு கொடையாக அளிக்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளும், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாயின. இவ்விரு சிலைகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் பவுன்டேசன் காலிகோ அருங்காட்சியகத்தில் இருப்பதாகத் தெரியவந்தது.

இந்நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோயிலில் இருந்து ராஜராஜன், உலகமாதேவி சிலைகள் உள்ளிட்ட மேலும் பல அரிய சிலைகள் மாயமானதும், இதுகுறித்து கோயில் நிர்வாகமும், அறநிலையத் துறையும், காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் மவுனமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, விசாரணை அதிகாரி டிஎஸ்பி ராஜாராம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் முறையாக புகார் பதிவு செய்தார்.

60 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோயிலின் உயர் நிலை நிர்வாகிகள் சிலரால் திருடப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்துக்கு அருகில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் மூலம், சென்னையில் கவுதம் சாராபாய்க்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அருங்காட்சியகத்தில் இருந்து சிலைகளை மீட்கும் பணிகள் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டன.

2 சிலைகளையும் மீட்க, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், குஜராத் அருங்காட்சியகத்துக்குச் சென்று கடந்த 28-ம் தேதி சட்டப்படி 2 சிலைகளையும் மீட்டனர். பின்னர் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை புறப்பட்டனர். நேற்று மாலையில் சிலைகளுடன் சென்னை வந்த குழுவினருக்கு ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பாண்டியராஜன், ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு மாலை அணிவித்தார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சைவ சித்தாந்தத் துறை மாணவர்கள், சைவ சித்தாந்த இருக்கை நிறுவனர், அருள் நந்தி சிவம் தலைமையில் கலந்துகொண்டு, திருக்கைலாய வாத்தியத்தை இசைத்து, வழியெங்கும் பூக்களைத் தூவி ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா கலந்துகொண்டார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஜி பொன். மாணிக்கவேல் கூறும்போது, “சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, விரைவில் தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்படும்” என்று கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் க.பாண்டியராஜன் கூறும்போது, “சிலைகளை 90 நாட்களுக்குள் மீட்ட ஐஜி பொன். மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

சிலைகளை உருவாக்கிய படைத் தளபதி

ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டி குடமுழுக்கு நடத்தியபோது, ராஜராஜனின் படைத் தளபதியான சேனாதிபதி மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால், இந்த இரு சிலைகள் உருவாக்கப்பட்டு, இருவரும், கோயில் மூலவரான பெருவுடையாரை நோக்கி கும்பிடுவதுபோல வைக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இந்த சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.150 கோடி ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x