Published : 01 Jun 2018 07:44 AM
Last Updated : 01 Jun 2018 07:44 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 230 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது ஸ்டாலின்தான்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 2010-ல் தொழில் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின்தான் 230 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தார் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டப்படி செல்லும் என்றும் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய காங்கிரஸ் கொறடா எஸ்.விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆகியோர், ‘‘பிரதான எதிர்க்கட்சியான திமுக பேரவையில் இல்லாமல் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எனவே, அவர்கள் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கத் தேவையான முயற்சிகளை பேரவைத் தலைவர் மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றனர்.

அவர்களுக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பேரவையில் கடந்த 29-ம் தேதி நீண்ட விளக்கம் அளித்தேன். எந்த தவறான கருத்தையும் அப்போது நான் கூறவில்லை. நடந்த சம்பவங்களையே எடுத்துக் கூறினேன். அரசு வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டோம்.

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதேனும் உத்தரவு பிறப்பித்து, அதற்கு மாறாக தமிழக அரசு உத்தரவு வெளியிட்டால்தான் அது சட்டப்படி செல்லாது. ஆனால், இதுவரை மத்திய வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டப்படி செல்லும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். 2010 மே 3-ம் தேதி தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அன்றைய தொழில் துறை அமைச்சர் ஸ்டாலின், ‘‘தூத்துக்குடி ஸ்டெர் லைட் நிறுவனம் ரூ.1,500 கோடியில் விரிவாக்கத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது’’ என தெரிவித் துள்ளார்.

அது மட்டுமல்லாது, ஸ்டாலின் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது சிப்காட் நிறுவனத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 230 ஏக்கர் நிலம் வழங்கியிருக்கிறார். இதில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர். இந்த உண்மைகளை எல்லாம் தகவல் உரிமைச் சட்டம் மூலம் யார் வேண்டுமானாலும் பெற முடியும். மக்களிடம் இருந்து உண்மைகளை யாரும் மறைக்க முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடுவதற்கு ஜெயலலிதா முதல்வராக இருந்த 2013-ல் இருந்தே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x