Published : 19 May 2018 05:06 PM
Last Updated : 19 May 2018 05:06 PM

காவிரி: கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக இன்று (சனிக்கிழமை) ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற கூட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமை ஏற்பார் என மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்தது. அதேபோல், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக உள்ளிட்ட 9 கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, நடிகர் நாசர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், அர்ஜுன் சம்பத், டி.ராஜேந்தர், வசீகரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் பேசிய கமல்ஹாசன், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்களை கூறினார்.

அந்த 5 தீர்மானங்கள்:

1. காவிரி குறித்த உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

2. தமிழகத்தில் இருக்கும் தண்ணீரைப் பாதுகாக்க அனைத்து ஏரிகளையும், குளங்களையும் தூர்வார வேண்டும். மற்றும் சீற்றணைகள்/தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

3. காவிரி டெல்டாபகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை பகுதியாக அமைக்க சட்டப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

4. அனைத்து விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.

5. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு இணையாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கவனித்து தீர்வு காண வேண்டும்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

 ‘நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x