Published : 04 May 2018 06:10 PM
Last Updated : 04 May 2018 06:10 PM

அவசரத் தேவைக்கு கார் இல்லை: ஆட்டோவில் பயணித்த வைகோ

 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியில் செல்ல கார் இல்லாததால் வாடகை ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்தார்.

அரசியல் தலைவர்களில் வித்தியாசமானவர் வைகோ. போராட்டங்களில் அவரே களம் இறங்கித் தொண்டர்களை ஒழுங்குபடுத்துவார், போராட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் என்ன மிரட்டினாலும் பயப்பட மாட்டார். காஞ்சிபுரத்திலிருந்து நடைபயணம் வந்தபோது போலீஸார் சென்னைக்குள் விடாமல் தடுக்க முயன்றும் சென்னைக்குள் ஊர்வலமாகத் துணிச்சலுடன் தடையை மீறி வந்தார். அவரைப் போராட்டக் களத்தில் எதிர்கொள்ள அதிகாரிகளே தயங்குவார்கள்.

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் பெரிய அளவில் வெடித்தபோது போலீஸார் மிரட்டியபோதும், கண்ணீர் புகை குண்டு அவர் மீதே வந்து விழுந்தபோதும் அசராமல் தொண்டர்களை ஆத்திரமூட்டலுக்கு இரையாக்காமல் போலீஸாரையும் கண்டித்து பெரிய அளவில் துப்பாக்கிச் சூடு நடக்க இருந்ததைத் தடுத்து மோதல் வராமல் பார்த்துக்கொண்டார்.

சிறையில் அடைத்தாலும் அங்கு தொண்டர்களுடன் சேர்ந்து வாலிபால் ஆடுவார். இது போன்ற வித்தியாசமான நடவடிக்கைகள் கொண்ட அரசியல் தலைவர்கள் ஒரு சிலரே. பொதுவாக தமிழக அரசியல்வாதிகள் எங்கு சென்றாலும் நான்கைந்து கார்கள் புடைசூழ செல்வது வழக்கம்.

ஆனால் இன்று மதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் வைகோ காரில் வெளியே செல்லாமல் ஆட்டோ பிடித்துச் சென்ற சம்பவம் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவை சந்திக்க வைகோ வீட்டிலிருந்து கிளம்பினார்.

ராயப்பேட்டை ஆர்கே சாலையில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலுக்குச் செல்ல காரை எடுக்கச் சொன்னார். அப்போது கார் வேறொரு வேலையாக வெளியே சென்றிருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆட்டோ ஒன்றைப் பிடித்து வர உதவியாளரிடம் வைகோ கூறினார். அவர் பேச்சைத் தட்ட முடியாது என்ற காரணத்தால் உதவியாளர் உடனடியாக ஆட்டோ பிடித்து வர ஆட்டோவில் ஏறி சோழா ஓட்டலுக்குச் சென்றார்.

கேரளாவில் பல அமைச்சர்களே சாதாரணமாக ஆட்டோவில் பயணிப்பர். ஆனால் தமிழகத்தில் வட்டச் செயலாளர் கூட அப்படிப் பயணித்துப் பார்க்க முடியாது. இந்நிலையில் ஆட்டோவில் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் பயணித்தது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x