Published : 04 May 2018 03:05 PM
Last Updated : 04 May 2018 03:05 PM

கேரளாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ நிர்வாகிகள் நியமனம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவதோடு நில்லாமல் முன்னுதாரணமாக செயல்பாட்டிலும் காட்டும் வகையில் கேரளாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ தங்குமிடம், உணவு உட்பட அத்தனை ஏற்பாடுகளையும் செய்து தர நிர்வாகிகளை நியமித்து போன் நம்பரையும் அளித்துள்ளார் தினகரன்.

நீட் தேர்வு மையங்களை வெளி மாநிலத்தில் அமைத்து தமிழக மாணவர்களை அலைக்கழிக்கும் வேலையை துவக்கியுள்ளனர். ராஜஸ்தான், கேரளா என தேர்வு மையங்களை அமைத்துள்ளதால் அவ்வளவு தூரம் சென்று தேர்வு எப்படி எழுதுவது என்று பெற்றோரும், மாணவர்களும் பதற்றத்தில் உள்ளனர்.

புதிய இடம், வெகு தொலைவுக்கு பயணம், புரியாத மொழி, தங்குமிடம், போக்குவரத்து, உணவுச்செலவு என அனைவர் முன்பும் உள்ள பிரச்சினை இதுதான். இந்நிலையில் அரசியல் கட்சிகள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அறிக்கை விடுவதோடு நில்லாமல் கேரளாவில் தங்கள் கட்சி நிர்வாகிகளை நியமித்து மாணவர்களுக்கு உதவ செல்போன் எண்களையும் டிடிவி தினகரன் கொடுத்துள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிராமப்புற ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்யவேண்டுமென்று நம்முடைய கட்சி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே குரல் கொடுத்தன. ஆனாலும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை, மாநில அரசும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

இந்தப் பின்னணியில் மிகுந்த மனவேதனையில் நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் தயாராகி வந்த நேரத்தில், அவர்களில் பல நூறு பேருக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்து அவர்களின் வேதனையை அதிகப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

இவ்வளவு தூரம் சென்று தேர்வு எழுதுவது கடினம் என்பதை, நேரக்குறைவை காரணம்காட்டி ஏற்க மறுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த இக்கட்டான நேரத்தில் மாநில அரசும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது என்றாலும் இந்தத் தேர்வுக்கு அந்த மாணவர்களையும் தயார்படுத்தவேண்டியது நமது கடமையாகும்.

அந்த வகையில் கேரள மாநில மையங்களில் அதிகளவில் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு உதவுவதற்காக சில ஏற்பாடுகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செய்திருக்கிறோம்.

-அந்த அடிப்படையில் கேரள மாநிலத்திலுள்ள கீழ்காணும் தேர்வு மையங்களுக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு தேவைப்படுமெனின் தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆலப்புழா 5059 பொற்காலராஜா

ராகேஷ் 9363109303 9994211705

எர்ணாகுளம் 5060

கன்னூர் 5061

கோழிக்கோடு 5064

மலப்புரம் 5065

பாலக்காடு 5066

திரிச்சூர் 5067

திருவனந்தபுரம் 5068, பாப்புலர் வி முத்தையா 8903455757 7373855503

கொல்லம் 5062

கோட்டயம் 5063

நீட் தேர்வு தொடர்பாக, சிபிஎஸ்இயின் நடவடிக்கைகள் என்பது மத்திய அரசின் தமிழக விரோதப் போக்கின் பிரதிபலிப்புத்தான். தேர்வு நடைமுறைகளெல்லாம் கணினி மயமானது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லும் சிபிஎஸ்இக்கு நான் தெரிவிக்க விரும்புவது சிபிஎஸ்இ கையாள்வது ஏதோ இயந்திரங்களை அல்ல, மாணவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் என்பதை அது உணரவேண்டும். இனிமேலும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் போக்கை மத்திய அரசு உத்தரவின்பேரில் இயங்கும் சிபிஎஸ்இ மாற்றிக்கொள்ளவேண்டும் என எச்சரிக்கிறேன்.

நீட் தேர்வு என்கிற அநீதியிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x