Published : 04 May 2018 01:20 PM
Last Updated : 04 May 2018 01:20 PM

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் - மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் வசதிகள் செய்து தர ஸ்டாலின் வலியுறுத்தல்

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணம், தங்கும் வசதி உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தன்னுடைய முகநூல் பக்கத்தில், “தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்திலேயே அவர்களுக்கும் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும, என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டு மாணவர்கள் நலன்பற்றி கவலைப்படாத சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை பிறப்பிக்கப்பட்டு, “தமிழக மாணவர்கள் வெளிமாநில தேர்வு மையங்களில் சென்றுதான் தேர்வு எழுதவேண்டும்”, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது.

நீட் தொடர்பாக பாதிக்கப்படும் மாணவர்கள் கேட்கும் எந்த நீதியையும் அளிக்க விடக்கூடாது என்பதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு உறுதியாக இருந்து தமிழகத்திற்கு துரோகம் விளைவிப்பது இதிலிருந்து வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்நிலையில், இந்தாண்டு தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் கேரளாவிற்கும், ராஜஸ்தானுக்கும் சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழக அரசின் அக்கறையின்மையால் தமிழக மாணவர்கள் துயரத்திற்கும், வீண் அலைச்சலுக்கும் உள்ளாகி நீட் தேர்வு மதிப்பெண்களையும் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

ஆகவே, இப்போதாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு, வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச்செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உடனடியாக உரிய உதவிகளை செய்ய வேண்டும்.

கேரளா செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதி, ராஜாஸ்தான் மாநிலத்திற்கு போவதற்கான விமான பயணக்கட்டண வசதி மற்றும் அங்கு பெற்றோர்களுடன் தங்கி தேர்வு எழுதுவதற்கு வசதியாக தங்குமிடம் போன்றவற்றை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதுதொடர்பான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேரடி கண்காணிப்பில் எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x