Last Updated : 04 May, 2018 12:22 PM

 

Published : 04 May 2018 12:22 PM
Last Updated : 04 May 2018 12:22 PM

பத்மஸ்ரீ விருதுக்கு எழுத்தாளர் பிரபஞ்சனின் பெயர் பரிந்துரைக்கப்படும்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதுக்கு எழுத்தாளர் பிரபஞ்சனின் பெயர் புதுச்சேரி அரசு சார்பில் பரிந்துரை செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் 57-வது ஆண்டு இலக்கியப் பணிக்கு பாராட்டு விழா புதுச்சேரி சுய்ப்பிரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க கூடத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

விழாவில் பிரபஞ்சனுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொற்கிழியை வழங்கி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

''3 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் எழுத்தாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவுக்கு என்னை அழைத்தார்கள். அதுவரை அவரை நான் பார்த்ததும் இல்லை, அவரைப் பற்றி நான் கேள்விபட்டதும் இல்லை. பின்னர் அவருடைய படைப்புகளைக் கேட்டபோது, அவர் புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைத்த பொக்கிஷம் என்று நான் கருதினேன்.

விழாவில் பங்கேற்கும்போது புதுச்சேரி மண்ணின் மைந்தரான அவருக்கு புதுச்சேரியில் இதுவரை பாராட்டு விழா நடத்தப்படவில்லையே என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. அப்போது மேடையில் இருக்கும்போதே பிரபஞ்சனிடம் புதுச்சேரி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும், அதில் தாங்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

அதன்படி இப்போது விழா நடத்தப்பட்டுள்ளது. சங்க காலத்தில் இருந்தே கவிஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் போட்டி அதிகமாக இருக்கும். ஒருவரை ஒருவர் பாராட்டமாட்டார்கள். ஒரே இடத்தில் கூடமாட்டார்கள். ஆனால், பிரபஞ்சனைப் பாராட்ட அனைத்து எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் ஒரே இடத்தில் கூடியிருப்பது, அவரையும், அவரது எழுத்தையும் அனைத்து படைப்பாளிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

ஆனந்த ரங்கம்பிள்ளையின் டைரி குறிப்பை தவிர புதுச்சேரி மாநிலத்தின் வரலாறு பெரிய அளவில் எழுதப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. இளைஞர்கள் அதை அறிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் புதுச்சேரியின் வரலாறு எழுதப்பட வேண்டும். புதுச்சேரியின் ஒவ்வொரு தெருவின் வரலாறு பற்றியும் பிரபஞ்சன் எழுதியுள்ளார், வானொலியில் பேசியுள்ளார்.

எனவே, தமிழ் வளர்ச்சித்துறையில் அவருக்கு ஒரு கவுரவப் பொறுப்பு அளிக்கப்பட்டு புதுச்சேரியின் வரலாற்றை எழுதும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படும். இதற்கு எங்கள் அரசு கண்டிப்பாக துணைநிற்கும். எதிர்வரும் சுதந்திர தின விழாவின்போது பத்மஸ்ரீ விருதுக்கு பிரபஞ்சனின் பெயர் புதுச்சேரி அரசு சார்பில் பரிந்துரைக்கப்படும்.

புதுச்சேரியில் ரூ.14 கோடியில் மிகப்பெரிய கலையரங்கம் கட்ட ஏற்பாடு நடந்து வருகிறது. இதில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.9 கோடியில் ரூ.6 கோடி கிடைத்துவிட்டது. இந்த கலையரங்கம் அமைந்தால் மேடை நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் தங்களது கலையை அரங்கேற்றம் செய்ய வசதியாக இருக்கும்.

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு அரசு சார்பில் உரிய உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாரதி, பாரதிதாசன் பெயரில் படைப்பாளிகளுக்கு விருது வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், கலைஞர்கள், எழுத்தாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும்'' என்றார்.

மனிதனை, மனிதர்களுக்கு உணர்த்துவது தான் இலக்கியத்தின் வேலை:

எழுத்தாளர் பிரபஞ்சன் ஏற்புரை வழங்கி பேசியதாவது:

''எனது 73 வயது காலத்தில் இதுபோன்ற சிறப்பான பாராட்டு விழா எனக்கு நடந்தது இல்லை. உலகில் பல்வேறு நாடுகளில் எனக்கு பாராட்டு விழா நடந்திருந்தாலும், நான் பிறந்த புதுச்சேரி மண்ணில் நடத்தப்படும் பாராட்டு விழாதான் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை 86 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

எனது சமகால எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இவ்விழாவில் பங்கேற்றதை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். எங்களுக்குள் போட்டி, பொறாமை ஒதுபோதும் இருந்தது இல்லை. எனது நாற்காலியில் அவரோ, அவரது நாற்காலியில் நானோ ஒருபோதும் அமர முடியாது என்பது இருவருக்கும் தெரியும்.

250 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு இலக்கியத்தில் எழுதப்பட்ட சிறிய கதை தான் உலக நாடுகளில் பல படைப்பாளிகளை உருவாக்கியது. அந்தக் கதை தான் என்னையும் படைப்பாளியாக்கியது. மனிதனை, மனிதர்களுக்கு உணர்த்துவது தான் இலக்கியத்தின் பணி. ஏன் எழுத்தாளன் பாராட்டப்பட வேண்டும் என்றால், எழுத்தாளர்கள் மற்றவர்களுக்காக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, தங்களுக்காக சிந்திக்க அவர்களுக்கு நேரம் இருக்காது. எனவே, சமூகம் தான் எழுத்தாளர்களை இதுபோல பாராட்ட வேண்டும். புதுச்சேரி பற்றி இதுவரை கதைகள், நாவல்கள் உள்பட பல படைப்புகளில் 10,000 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். புதுச்சேரி அரசு கொடுத்துள்ள உற்சாகத்தால் மேலும் 10,000 பக்கங்கள் எழுதுவேன்.

ஏற்கெனவே எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. சோழர் காலம், பிரெஞ்சு காலம், சுதந்திரத்துக்குப்பின் புதுச்சேரி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து எழுத முடிவு செய்துள்ளேன். இதை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் ஒரு புத்தகமும், முதிர்ந்த வாசகர்களுக்காக அடர்த்தியாக மற்ற புத்தகமும் எழுத முடிவு செய்துள்ளேன். என்னிடம் பலர் நீங்கள் சென்னைக்காரர் தானே என புதுச்சேரியிலேயே கேட்கின்றனர். இனிமேல் எனது வாழ்நாளில் பெரும்பகுதியை புதுச்சேரியில் கழிக்க முடிவு செய்துவிட்டேன். புதுச்சேரியில் கிடைத்த நட்பை எப்போதும் மறக்கமாட்டேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x