Published : 04 May 2018 10:18 AM
Last Updated : 04 May 2018 10:18 AM

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் பாரபட்சம்: வைகோ புகார்

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு நிவாரணத்தை குறித்த காலத்தில் முறையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “விவசாயிகள், இயற்கைச் சீற்றங்களாலும், கொடிய வறட்சியாலும் தாங்கள் பயிரிடும் பயிருக்கு உரிய விளைச்சல் கிடைக்காத காலங்களிலும் பயிரிட்ட நிலையிலேயே முழுமையான வருவாய் இழப்பிற்கு ஆளாகும் காலங்களிலும் அவர்களை நட்டத்தில் இருந்து சிறிதேனும் பாதுகாக்க பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் கணக்கிடுவதிலும் நிவாரணத் தொகை வழங்குவதிலும் எண்ணற்ற குறைபாடுகள் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உளுந்து, பாசி பயிரிட்டு வறட்சியால் வருவாய் இழந்த பிரிவினரில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் காப்பீட்டு பிரிமியம் செலுத்தியவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படுவதாகவும் நியூ இந்தியா அஸூரன்ஸ் (New India Assurance) மூலம் பிரிமியம் செலுத்தியவர்களுக்கு இன்னும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் பெருங்கவலையுடன் உள்ளனர்.

இதில் பருத்தி, மிளகாய் பயிரிட்டு வருவாய் இழந்தவர்களுக்கான இழப்பீடு குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் காப்பீட்டு பிரிமியம் செலுத்தியவர்களுக்கு காப்பீட்டு நிவாரணம் வழங்கப்பட்டுவிட்ட போதிலும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் உரிய காலத்தில் பிரிமியம் செலுத்திய ஆ.கரிசல்குளம், செவல்குளம், மலையான்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதி விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.

அரசு அறிவித்துள்ள முகமைகளில் ஒன்றில் பிரிமியம் கட்டியவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டும், மற்றொன்றில் பிரிமியம் செலுத்தியவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதும் விவசாயிகளுக்கு அரசு செய்யும் அநீதியாகும்.

தவிர, ஒரு வட்டத்தில் ஒரே வகையான காப்பீட்டு பிரிமியம் செலுத்தியவர்களில் ஒரு ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ 12,500 நிவாரணத் தொகை என்றும், அதே வட்டத்தில் மற்றொரு பகுதியில் ஒரே மாதிரி பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு அதைவிட பல மடங்கு குறைத்து நிர்ணயித்து நிவாரணம் வழங்குவதும், விவசாயிகளிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து தமிழகம் முழுவதுமே பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்தும் முகமைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறையும் முறையாக கண்காணித்து விரைவாகவும், பாரபட்சம் இல்லாத வகையிலும், வருவாய் இழப்புக்கு ஏற்ற வகையிலும், பிரிமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் சரியான நேரத்தில் பயிர்க்காப்பீட்டு நிவாரணம் கிடைத்திட தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x