Published : 04 May 2018 09:13 AM
Last Updated : 04 May 2018 09:13 AM

சூனாம்பேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்: உடற்கூறு ஆய்வு செய்வதில் சிக்கல்

சூனாம்பேடு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த அரசு ஊழியர் சிற்றரசுவின் மரணத்துக்குக் காரணமான காவல் ஆய்வாளர் ரவிக்குமாரை பதவி இடைநீக்கம் செய்ய மாவட்ட காவல் துறை மறுத்துவிட்டதால், சிற்றரசுவின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சூனாம் பேடு பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு(45) இவர் அச்சிறுப்பாக்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் வீட்டுமனைத் தொடர் பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இதையடுத்து கடந்த 1-ம் தேதி சிற்றரசுவை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சிற்றரசு காவல் நிலையத்தில் மர்மமாக இறந்து கிடந்ததாக சொல்லப்பட்டது. அவரை போலீஸார் அடித்து கொலை செய்திருக்கலாம் என சிற்றரசுவின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அரசு ஊழியர் சிற்றரசு மரணத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸாரை பதவி இடைநீக்கம் செய்ய வேண்டும், சிற்றரசை இழந்து வாடும் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், உடல் கூறு ஆய்வு செய்யும்போது எங்கள் தரப்பு மருத்துவர்களும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது குடும்பத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட சமூக அமைப்புகளின் சார்பில் 2-வது நாளாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரத்துக் கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையிலான போலீஸார் 4 மணி நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் உடற்கூறு ஆய்வு செய்ய சம்மதிக்க வேண்டும் என போலீஸார் கேட்டுகொண்டானர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிற்றரசுவின் மரணத்துக்குக் காரணமான சூனாம்பேடு காவல் ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸாரை பணியிடை நீக்கம் செய்தால் மட்டுமே உடற்கூறு ஆய்வு செய்ய சம்மதிப்போம் என தெரிவித்தனர். இதற்கு மாவட்ட காவல் துறை மறுப்பு தெரிவித்தது.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிற்றரசுவின் உறவினர் மற்றும் சமூக அமைப்புகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாங்கள் உடற்கூறு ஆய்வு செய்துகொள்கின்றோம் எனக் கூறி கலைந்து சென்றனர்.

இதனால் சிற்றரசுவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிற்றரசுவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த இடத்தில்அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x