Published : 04 May 2018 07:27 AM
Last Updated : 04 May 2018 07:27 AM

தமிழகத்தை முற்றிலும் புறக்கணிக்கும் மத்திய அரசு: கடலூர் போராட்டத்தில் பாரதிராஜா, சீமான், கவுதமன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்று கடலூரில் நடந்த போராட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள் குற்றம்சாட்டினர்.

இயக்குநர் கவுதமனின், ‘தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு’ சார்பில் “நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோலிய மண்டலம் ஆகியவற்றை கைவிட கோரியும்” கடலூரில் நேற்று போராட்டம் நடந்தது.

இதில், திரைப்பட இயக்குநர்கள் கவுதமன், பாரதிராஜா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கவுதமன் பேசும்போது, “மத்திய அரசு தமிழகத்தின் நலனுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் மையத்தை முற்றுகையிடுவோம்” என்றார்.

பாரதிராஜா பேசும் போது, “நாங்கள் தண்ணீர் கேட்டால், கர்நாடகா தேர்தல் பரபரப்பில் இருப்பதாக சொல்கிறார்கள். மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நம்மை பார்க்கிறார்கள். இங்கு ஒரு சுடர் ஏற்றப்பட்டுள்ளது. இந்த சுடர் நன்றாக கொழுந்துவிட்டு எரிந்து தமிழ்நாட்டில் குப்பைகளை எரித்து சுத்தப்படுத்தும். தமிழக மக்கள் தேசிய கட்சிகளை புறக்கணித்து மாநில கட்சிகளை ஆதரிக்க வேண்டும்’’ என்றார்.

சீமான் பேசும் போது, “மத்திய அரசு தொடர்ந்து பல விஷயங்களில் தமிழகத்தைப் புறக்கணித்து வருகிறது. ஒரு மருத்துவரை உருவாக்க அரசு ரூ.11 லட்சம் செலவு செய்கிறது. நீட் தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் மருத்துவர்களிடம் சேவை மனப்பான்மை இருக்காது.

நீட் தேர்வு மூலம் அனைவரையும் மத்திய அரசின் சிபிஎஸ்சி பள்ளிகளில் படிக்க வைத்து மறைமுகமாக இந்தி திணிக்கப்படுகிறது. நீட் தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்தில் உள்ள 24 மருத்துவக் கல்லூரிகளையும் பூட்டுவோம்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x