Published : 04 May 2018 07:26 AM
Last Updated : 04 May 2018 07:26 AM

தருமபுரி, கிருஷ்ணகிரியில் சூறைக்காற்றுடன் கனமழை: 300 டன் மாங்காய் உதிர்ந்தன: சிவகங்கையில் 10 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்; கோவை-திருப்பூரில் பலத்த மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் கொட்டித் தீர்த்தது. இதனால், காரிமங்கலம், ஜங்கசமுத்திரம், பாலக்கோடு பகுதிகளில் மாந்தோப்புகளில் 300 டன் மாங்காய்கள் உதிர்ந்தன.

காய் பருவத்திலேயே மாங்காய்கள் உதிர்ந்ததால் இவற்றை மாங்கூழ் தயாரிப்புக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், உதிர்ந்த மாங்காய்கள் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் மண்டிகளில் குவிந்தன. இவற்றை ஊறுகாய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், மரக்கிளைகள் உடைந்து விழுந்தன. டன் கணக்கில் மாங்காய்களும் உதிர்ந்தன.

சிவகங்கையில் நேற்று முன்தினம் இரவில் குளிர் காற்று வீசியது. பின்னர், திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, பலத்த காற்றும் வீசியதால் பல பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. காஞ்சிரங்கால் பகுதியில் 10 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளிலும் ஒரு மணிநேரத்துக்கும் மேல் மழை பெய்தது. சிவகங்கையில் 12.6 செ.மீ. மழை பதிவானது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, அவிநாசி, பல்லடம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை, தென்னை மரங்கள் மற்றும் சோளப்பயிர்கள் பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது, மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பிச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x