Published : 04 May 2018 07:25 AM
Last Updated : 04 May 2018 07:25 AM

காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர், ஆய்வு மாணவரிடம் மதுரை சிறையில் சந்தானம் விசாரணை

நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக மதுரை மத்திய சிறையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடம் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல்ரீதியாக தவறாக நடக்க வற்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார். இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இவர் மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவியிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு மதுரை மத்திய சிறைக்கு சென்ற அவர், கூடுதல் சிறை கண்காணிப்பாளர் அறையில் வைத்து முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் தனித்தனியே விசாரித்தார். நிர்மலாதேவியுடன் ஏற்பட்ட பழக்கம், பல்கலைக்கழகத்துக்கு அவரது வருகை, மாணவிகளிடம் பேசத் தூண்டிய பின்னணி உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டறிந்தார்.

அப்போது இருவரும் அளித்த பல்வேறு தகவல்களை அதிகாரி சந்தானத்தின் உதவியாளர்களான தியாகேஸ்வரி, கமலி ஆகியோர் பதிவு செய்தனர். மேலும் விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. அதன் பிறகு அரசு சுற்றுலா மாளிகைக்கு திரும்பிய அவர் தொடர்ந்து அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில், புரட்சிகர மாணவர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நிர்மலாதேவி வழக்கை பெண் டிஐஜி ஒருவரின் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து விசாரிப்பதோடு, அதை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.பாரதிதாசன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் வரும் மே 23-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x