Published : 04 May 2018 07:21 AM
Last Updated : 04 May 2018 07:21 AM

மதுரை மீனாட்சியம்மன் கோயில் புனரமைப்பு பணிக்கு மத்திய அரசு உதவும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கும் பணிக்கு மத்திய அரசு உதவும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதம் அடைந்த பகுதிகளை நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மீனாட்சியம்மன் கோயில் பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்று. பக்தி, வழிபாடு, ஆன்மிகம், இந்து தர்மத்தின் முக்கிய அடையாளமாகவும் இக்கோயில் உள்ளது. இக்கோயிலை பழைய அழகு குலையாமல் புனரமைக்க தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். இந்தியாவில் 75 சதவீதத்துக்கு மேல் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் மத்திய அரசின் 6 முக்கிய திட்டங்கள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் 75 சதவீதத்துக்கு மேல் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் 1,477 ஊராட்சிகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 34 ஊராட்சிகளும், விருதுநகர் மாவட்டத்தில் 35 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாவட்டங்களில் 6 திட்டங்களும் நல்லபடியாக செயல்பாட்டில் உள்ளன என்றார்.

நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும் கள்ளழகர் எழுந்தருளிய மண்டகபடிக்கு சென்ற அவர் மக்களோடு மக்களாக தரிசனம் செய்தார்.

பரமக்குடிக்கு அவர் நேற்று முன்தினம் சென்றபோது திமுகவினர் கருப்புக் கொடி காட்டினர். அப்போது அமைச்சரின் கார் மீது செருப்பு, கற்கள் வீசப்பட்டன. இதுகுறித்து பாஜக நிர்வாகி கேசவன், பார்த்திபனூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தந்த புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x