Published : 04 May 2018 07:20 AM
Last Updated : 04 May 2018 07:20 AM

காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது: தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம்

காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் அவகாசம் கேட்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: காவிரி பிரச்சினையில் தமிழகத்தை மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சித்து வருகிறது. பிரதமரும், மத்திய அமைச்சர்களும் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

இது தமிழகத்தை ஏமாற்றும் துரோகச் செயல். ஆனாலும், அதிமுக அரசு எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் சட்டத் துறையும், அதன் வழக்கறிஞர்களும் பெயரளவுக்கே செயல்பட்டு வருகின்றனர். காவிரி தொடர்பாக பிரதமரை தனியாக சந்தித்துப் பேச முதல்வர் பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்படாதது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து 4 டிஎம்சி நீரை உடனடியாக கர்நாடகம் திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் மத்திய அரசின் துரோகம் தொடருமானால் மாபெரும் போராட்டக் களம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும். மக்கள் சக்தியை திரட்டி ஒற்றுமையோடு தொடர்ந்து போராடுவதுதான் வரலாறு காட்டும் தீர்வுக்கான வழியாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு மேலும் அவகாசம் அளிப்பது தமிழகத்துக்கு நீதி கிடைப்பதில் தாமதத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்தும். அடுத்த 10 நாட்களில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிடும். உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறையும் வந்துவிடும். அதுவரை தாமதப்படுத்தும் நோக்கத்தில்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கர்நாடகத் தேர்தல் வெற்றிக்காக எத்தகைய துரோகத்தையும் செய்ய மத்திய அரசு தயங்காது. வரும் 8-ம் தேதியாவது தமிழகத்துக்கு நீதி கிடைக்காவிட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்து போராடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: எதிர்பார்த்தபடியே காவிரி பிரச்சினையில் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டது. எனவே, மாபெரும் மக்கள் போராட்டத்தை மீண்டும் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மத்திய அரசுக்கு இணக்கமாக அதிமுக அரசு செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. ஒருமித்த கருத்துள்ளவர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கர்நாடக தேர்தலைக் காரணம் காட்டி காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் அவகாசம் கேட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

இதன்மூலம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வராது என்பது மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு இழைத்துவரும் துரோகத்தின் அடுத்தகட்டமாக இது உள்ளது. எனவே, மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: காவிரி பிரச்சினையில் மத்திய அரசு மிக மிகக் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்து மத்திய அரசுக்கு இணக்கமாக அதிமுக அரசு செயல்படுவது மத்திய அரசின் துரோகத்தைவிட பெரிய துரோகமாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைத்தால்தான் நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற முடியும். 4 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வெறும் கண்துடைப்பாகும். இதனால் தமிழகத்துக்கு உரிய நீதியோ, தீர்வோ கிடைக்காது. கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே உரிய தீர்வாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கர்நாடகத்தில் இரு தேசிய கட்சிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் போட்டியில் தமிழகத்தின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யவில்லை. இதற்கு கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமாகா தொடர்ந்து போராடும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இது மத்திய பாஜக அரசின் துரோகத்தை எடுத்துக் காட்டுகிறது.

தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் உடனே திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வழக்கின் கவனத்தை மத்திய அரசின் பக்கமிருந்து கர்நாடகத்தை நோக்கித் திருப்புவதாக உள்ளது. எனவே, காவிரி உரிமையை மீட்கவும், தமிழக மக்களின் உணர்வை மத்திய பாஜக அரசுக்கு எடுத்துக்காட்டவும் வலுவான போராட்டங்களை நடத்த தமிழக மக்கள் தயாராக வேண்டும்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழக விரோதப் போக்கின் தொடர்ச்சியாகவே மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது. காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கேட்பது தமிழக அரசின் முழு தோல்வியையே காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் தொடரும். இந்த துரோகங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சமக தலைவர் சரத்குமார்: காவிரி என்பது தமிழர்களின் வாழ்வுரிமையோடு தொடர்புடையது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும். கேட்டுப் பெற முடியாத உரிமையை போராடி மட்டுமே பெற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x