Published : 30 Apr 2018 04:43 PM
Last Updated : 30 Apr 2018 04:43 PM

அரசு வழக்கறிஞர்களை ஆளுங்கட்சியிலிருந்து நியமிக்கக் கூடாது: விதிகளை வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யக்கூடாது, அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசுத்தரப்பில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் குறித்த விதிகளை தமிழக அரசு அறிவித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை எனக் கூறி, அந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் வசந்தகுமார் அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்காமல், ஆளும் அரசை சார்ந்த நபர்களுக்கே அல்லது அந்த கட்சியைச் சார்ந்த நபர்களுக்கே பதவி வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யும் இந்த நடைமுறையானது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தவறானது ஆகவே தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்கும் போது, தமிழக அரசுக்கு அனுப்பும் பட்டியலில் இருந்து தலைமை வழக்கறிஞர், பொதுத்துறை, உள்துறை மற்றும் சட்டத் துறை செயலாளர்கள் அடங்கிய குழுவின் மூலமாகவே தேர்ந்தெடுத்து அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே உள்ளன. ஆனால் நடைமுறைகளுக்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

எனவே, விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான நடைமுறை விதிகளை வகுத்து வெளியிட வேண்டும். மேலும் அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x