Published : 30 Apr 2018 09:39 AM
Last Updated : 30 Apr 2018 09:39 AM

வங்கிகளில் நிலவும் பணத் தட்டுப்பாடு; தொழிலாளர்கள், ஏழைகள் பாதிப்பு: வங்கி அதிகாரிகள், ஊழியர் சங்கங்கள் புகார்

வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டால் முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் ஏழை கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப் பின் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் உள்ளிட்ட 100 அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ஆந்திரா, மணிப்பூர், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து பணத்தை பெற்று நிலைமையை சமாளித்து வருகின்றன. மேலும், கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கை செய்தபோது பணத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை ஞாபகப்படுத்தும் வகையில் தற்போதைய நிலைமை உள்ளது.

நிதி தீர்மானம் மற்றும் வைப்பு காப்பீடு (எப்ஆர்டிஐ) மசோதாவல் ஏற்பட்டுள்ள அச்சம், புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும் அளவுக்கு ஏடிஎம் இயந்திரங்களில் போதிய வசதிகள் செய்யப்படாதது, சேவைக் கட்டணம் விதிப்பதில் இருந்து தப்பிப்பதற்காக அதிகளவு பணம் வங்கிகளில் இருந்து எடுத் தல் உள்ளிட்டவை பணத்தட்டுப்பாடு ஏற்பட முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. அத்துடன் பணப் புழக்கமும் போதிய அளவு இல்லை. ஆனால், மத்திய ரிசர்வ் ரூ.1.25 லட்சம் கோடி பணம் கையிருப் பில் உள்ளதாக தெரிவித் துள்ளது.

இந்தப் பணத்தட்டுப்பாட்டால் முறைசாரா தொழிலாளர்களும் ஏழை மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப் பாக விவசாயம், தொழில்துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பு குறைந்துள்ளதோடு அதிகம் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை வங்கிகள் மிகப் பெரிய பங்காற்றி வருகின்றன. ஆனால், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க பல் வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, மத்திய அரசு எப்ஆர்டிஐ மசோதாவை ரத்து செய்ய வேண்டும். வங்கி சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

வாராக் கடன் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x