Last Updated : 30 Apr, 2018 08:42 AM

 

Published : 30 Apr 2018 08:42 AM
Last Updated : 30 Apr 2018 08:42 AM

தமிழகத்தில் வரிஏய்ப்பு செய்த 284 தொழில் அதிபர்கள்: விரைவில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு செய்த தொழில் அதிபர்களின் விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் 284 தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற் றுள்ளன.

வரி ஏய்ப்பு செய்துவரும் தொழிலதிபர்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தியா முழுவதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத்தான் சென்னையில் கடந்த மாதம் நிஜாம் பாக்கு, சிஎன்ஆர் ஹெர்ப்ஸ், பிரபல ஜவுளி நிறுவனம், ஜுவல்லரி மற்றும் உணவகங்களில் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் வர்த்தகம் செய்துவரும் நபர்கள் அனைவரும் முறையாக வருமானவரியை செலுத்துகிறார்களா என்று தீவிரமாக கண்காணிக்கும் பணியை வருமான வரித்துறை செய்து வருகிறது.

அதனடிப்படையில் வரி ஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலையும் தயார் செய்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 284 தொழில் அதிபர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பலரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஜப்தி செய்துள்ளனர். ஆனால் அதுகுறித்த தகவலை அதிகாரிகள் வெளியிடாமல் வைத்துள்ளனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் வர்த்தகம் செய்து வருபவர்களில் 60 சதவீதம் பேர் முறையாக வருமான வரியைச் செலுத்துவதில்லை. அதனால் கடந்த சில மாதங்களாக அவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தோம். இதுவரை வரிஏய்ப்பு செய்தவர்களில் 284 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் சுமார் 70 பேர் வீடுகளில் சோதனை முடிந்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. மீதமிருப்பவர்கள் மீது நடவடிக்கை தொடங்கியிருக்கிறோம். அதில் ஒருசிலரின் சொத்துகளை ஏலம் விடுவதற்கு முடிவு செய்து இருக்கிறோம். இதற்கு உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

‘வருமான வரி செலுத்த தவறியவர்கள்’ என்று தலைப்பிட்டு சிலரது விவரங்களை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட்டோம். இது எதிர்பார்த்த அளவுக்கு பலனை தரவில்லை. எங்களது பட்டியலில் அதிக அளவில் ஐடி நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் வரி கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்டு அவர்களின் பெயர் விவரங்களை வெளியிடாமல் இருக்கிறோம்.

தமிழகம் பெரிய அளவில் வணிகம் செய்யும் மாநிலம். ஆனால் வருமான வரி குறைவாகவே கிடைக்கிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும்படி நிதி அமைச்சகத்தில் இருந்து அதிக அழுத்தம் வருகிறது.

எனவேதான் தனியாக குழு அமைத்து தொழில் அதிபர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x