Published : 30 Apr 2018 08:26 AM
Last Updated : 30 Apr 2018 08:26 AM

தி இந்து’- ‘கிங் மேக்கர்ஸ்’ ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் தலைநகர் சென்னையில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி: மக்களுக்கு சேவையாற்றும் உணர்வு இருந்தால் ஐஏஎஸ் ஆகலாம்- ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு அறிவுரை

‘மக்களுக்கு நன்மை செய்வதற்காக நான் என்னைக் கரைத் துக் கொள்வேன்’ என்ற உணர்வு இருந்தால் ஐஏஎஸ் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து, இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு இளையோர்களை தயார்படுத்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற வழிகாட்டு நிகழ்ச்சியை முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது.

இதன்படி, சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இந் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்முனைவோர் வளர்ச்சி, புது முயற்சிகள் நிறுவன இயக்குநர் வெ.இறையன்பு ஐஏஎஸ்பேசியதாவது:

நம் அனைவருக்குள்ளும் தன்னம்பிக்கை ஒரு பொறியாக இருக்கிறது. அதை தீயாக, தீப் பிழம்பாக மாற்றி, தீபமாக ஏற்றி, தீப்பந்தமாகப் பிடித்து, கலங்கரை விளக்கமாக மாற்றவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுவாகவே வெற்றி பெற்றவர்கள் நாம் வெற்றி பெற்றுவிட்டோம், இனி பணியைக் கவனிப்போம் என்று மற்றவர்களை விட்டுவிட்டுச் செல்கிறார்களே தவிர, தாங்கள் பெற்ற வெற்றியை, அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு, திட்டமிடுதல், படிப்பு எல்லாம் தேவை. ஆனால் இவை அனைத்தையும்விட மக்களுக்கு நன்மை செய்வதற்காக நான் என்னைக் கரைத்துக் கொள்வேன் என்கிற அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் பெற்றுவிடலாம்.

பல்கலைக்கழகத் தேர்வு என்பது பூங்காவில் பயணம் செய்வது போன்றது. அங்கு நம்மை பூங்காற்று தழுவும். ஆனால், போட்டித் தேர்வு என்பது வனத்தில் பயணிப்பதைப் போன்றதாகும். அங்கு யானை, சிறுத்தை, பாம்பு, வண்டு போன்றவை எப்போது வரும் என்று தெரியாது, போட்டித் தேர்வுக்கு அதிகபட்ச விழிப்புணர்வுடன் தயார் செய்ய வேண்டும்.

லெனின் கதை உதாரணம்

தோல்வி கண்டு துவளக்கூடாது என்பதற்காக ஒரு சம்பவத்தைத் குறிப்பிட விரும்புகிறேன். லெனின் ஒரு போராளியாக மாறுவதற்கு முன்பு மாணவராக இருந்தார். அப்போது ஜார் மன்னர் ஒவ்வொரு நாளும் யாரைத் தூக்கிலிட வேண்டும் என்ற பட்டியலை ஒட்டுவார். அவ்வாறு ஒரு நாள் அந்த பட்டியலை லெனின் பார்த்தார். அன்று அவருக்கு கணக்குத் தேர்வு. அப்பட்டியலில் அவரது சகோதரர் பெயர் இருந்தது.

இப்படியொரு நிலைமை இருந்தால், இதையே ஒரு சாக்காக வைத்து நாம் தேர்வுக்குப் போகாமல் இருந்திருப்போம். ஆனால், லெனின் தேர்வு எழுதச் சென்றார். கணக்குப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றார். எத்தனை உணர்ச்சிப் பேராண்மை இருந்தால் அவர் இதைச் செய்திருக்க முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே, சின்னச்சின்ன தோல்விகளைக் கண்டு நாம் தளரக்கூடாது.

குடிமைப் பணி தேர்வுக்காக திட்டமிட்டு படியுங்கள், செல்போனை சிறிது காலத்துக்கு ஒதுக்கி வையுங்கள். தேவைப்பட்டால் செல்போனை சரியாகப் பயன்படுத்துங்கள். பாடங்களை சுழற்சி முறையில் படியுங்கள். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படியுங்கள். மற்ற நேரங்களில் நல்ல இசையைக் கேளுங்கள். நல்ல புத்தகத்தைப் படியுங்கள். நன்றாகக் குளித்து, ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். அட்டவணையிட்டு படியுங்கள். நண்பர்களுடன் விவாதியுங்கள்.

அடுத்தவர் தெரிவிக்காத கருத்துகளை நீங்கள் தெரிவித்தால் அப்போதுதான் கவனிக்கப்படுவீர்கள். இத்தேர்வுக்கு செய்தித்தாள் வாசிப்பு மிக அவசியம். அகண்ட, ஆழமான வாசிப்பு இருந்தால்தான் மேற்கோள்காட்டி எழுத முடியும். படிப்புதான் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். இவ்வாறு இறையன்பு பேசினார்.

கூடுதல் டிஜிபி எம்.ரவி

நிகழ்ச்சியில் கூடுதல் டிஜிபி எம்.ரவி பேசியதாவது: நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ரவி ஐபிஎஸ் என எழுதினேன். அப்போது ஐபிஎஸ் என்ற வார்த்தையின் விரிவாக்கம் கூட தெரியாது. எனது உள்மனது ஆசையே என்னை அந்த நிலைக்குக் கொண்டு போனது. தன்னம்பிக்கையை கையாள்வதில்தான் வெற்றி இருக்கிறது. 1988-ம் ஆண்டு நானும் இறையன்பும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு டெல்லி சென்றோம். அவர் வெற்றி பெற்றுவிட்டார். நான் வெற்றி பெறவில்லை. நான் மீண்டும் தேர்வெழுதி 1991-ம் ஆண்டு வெற்றி பெற்றேன்.

முதன்மை மற்றும் பிரதான தேர்வுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வு, உடல் ரீதியான ஆளுமையைக் குறிக்காது. அது அறிவுசார்ந்த ஆளுமையாகும். அதில், உங்களது சமூகப் பார்வையைத்தான் கவனிப்பார்கள். இவ்வாறு ரவி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்று, அண்மையில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சிவ கிருஷ்ணமூர்த்தி, அமலன் அட்வின், புவனேஷ், ஐஎப்எஸ் தேர்வில் வென்ற பிரவீன் ஆகியோருக்கு விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

நாள்தோறும் நாளிதழ் வாசிப்பு அவசியம்: நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ்

யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதல்படியாக முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களை வாங்கிப் பார்க்க வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் 'தி இந்து' போன்ற தரமான நாளிதழை தொடர்ந்து படிக்க வேண்டும். 10 புத்தகங்களை படிப்பதைவிட ஒரு தரமான புத்தகத்தை 10 முறை திரும்ப, திரும்ப படிப்பது நல்லது. குழு விவாதம், சுயகட்டுப்பாடு, தொடர்புமுயற்சியும் இருந்தால் வெற்றி உங்கள் வசமாகும்.

திட்டமிட்டு படித்தால் எதுவும் சாத்தியம்: கிங்மேக்கர்ஸ் அகாடமி சத்யஸ்ரீ பூமிநாதன்

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது யுபிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழக மாணவர்களிடம் திறமை இருந்தும் அவர்கள் யுபிஎஸ்சி தேர்வுகளில் அதிகம் பங்கு பெறாததால் தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. வட இந்தியாவில் ஓராண்டு முன்பே படிக்க தொடங்கிவிடுகின்றனர். முன்பே திட்டமிட்டு படிப்பதும், தொடர் முயற்சியும்தான் வெற்றிக்கான வழிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x