Published : 30 Apr 2018 07:58 AM
Last Updated : 30 Apr 2018 07:58 AM

விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்: இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை நடைபெறுகிறது. முன்னதாக மூன்று மாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை நேற்று வரவேற்றனர்.

மதுரையில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த அழகர்மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பு வாய்ந்தது. இன்று (ஏப்.30) காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார்.

முன்னதாக அழகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட கள்ளழகர், கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கரங்களில் சங்கு, சக்கரம், நேரிக் கம்பு, வளைத்தடி ஏந்தியபடி சர்வ அலங்காரத்தில் கள்ளழகர் கோலத்துக்கு மாறி தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார்.

மதுரைக்கு புறப்பாடு

கள்ளழகருக்கு அழகர்கோவில் நுழைவு வாயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் மேள தாளம், அதிர்வேட்டுகள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கருப்பசாமியிடம் இருந்து விடைபெற்று மதுரைக்கு புறப்பட்டார்.

மூன்று மாவடியில் எதிர்சேவை

தொடர்ந்து பொய்கைகரைபட்டி, கள்ளந்திரியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்பன் திருப்பதி உட்பட வழிநெடுகிலும் உள்ள மண்டபங்களில் எழுந்தருளியவாறு வந்தார்.

நேற்று காலை 6 மணிக்கு மூன்று மாவடி வந்த கள்ளழகரை, அங்கு விடிய, விடிய காத்திருந்த பல்லாயிரம் பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடைபெற்றது. சர்க்கரை நிரப்பிய, வாழை இலையுடன் பூ சுற்றப்பட்ட செம்பில் சூடம் ஏற்றி ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.

அதன்பின்னர் புதூர், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில், டிஆர்ஓ காலனி, தாமரைத்தொட்டி சாலை, காவல் ஆணையர் அலுவலகம், மாநகராட்சி வடக்கு மண்டலம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளியவாறு மாலையில் தல்லாகுளம் அவுட் போஸ்ட் அம்பலகாரர் மண்டகப்படிக்கு கள்ளழகர் வந்தடைந்தார். அங்கும் திரளான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்தனர்.

தங்கக் குதிரையில் கள்ளழகர்

தொடர்ந்து தல்லாகுளம் பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் இரவில் தல்லாகுளம் பெருமாள் கோயில் சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனமாகி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர், சுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கோயிலைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயிலை சென்றடைந்தார். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், தங்கக் குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

தமுக்கம், கோரிப்பாளையம் வழியில் பல்வேறு சமுதாய மண்டகப் படிகளில் எழுந்தருளியவாறு அதிகாலை 5.45 முதல் 6.15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

இதையொட்டி ஆழ்வார்புரம் அருகே வைகை ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆழ்வார்புரம், மேம்பாலம் பகுதி மின்னொளியால் ஜொலித்தது. ஆற்றின் இரு கரையிலும் அதிகாலை முதலே வெளியூர், உள்ளூர் பக்தர்கள் திரண்டிருந்தனர். வைகை அணையில் இருந்தும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வண்ண விளக்குகள், தோரணங்கள், அன்ன தானம், நீர்மோர் பந்தல்கள், மேள தாளத்துடன் அழகர் வேடமிட்ட பக்தர்களின் நடனம் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x