Published : 09 Apr 2018 06:37 PM
Last Updated : 09 Apr 2018 06:37 PM

ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு: மைதானம், ஹோட்டல் முன் போலீஸ் குவிப்பு: கடும் கட்டுப்பாடு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பை அடுத்து கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரும் போராட்டம் தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. தமிழகம் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் தேவையா என கேள்வி எழுந்தது. ஐபிஎல் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் மைதானமே காலியாக இருக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோன்று அரசியல் கட்சிகள் அனைத்தும் போட்டி நடத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்தன. சீமான், கருணாஸ், தமீமுன் அன்சாரி போன்றோர் போட்டி நடந்தால் வீரர்களை சிறைப்பிடிப்போம் என்று கூறியிருந்தனர். இதனால் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் திரையுலகினரும் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்ற கோரிக்கை வைத்தனர். பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டாம், இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போட்டியை நடத்த விடமாட்டோம், வீரர்கள் உள்ளே வரலாம் வெளியில் போக மாட்டார்கள் என்றெல்லாம் சவால் விடுக்கப்பட தமிழ் உணர்வாளர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு திரண்ட இளைஞர்கள் நம் உணர்வைக் காட்ட இதை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலை முற்றுகையிட்டு வெளியேற விடாமல் செய்யவும் போராட்டக்காரர்கள் யோசித்து வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

“போட்டிக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலானவற்றை நாங்கள் வாங்கிவிட்டோம், போட்டி நடந்தால் அப்புறம் பாருங்கள் எப்படி மேட்ச்சை நிறுத்துவது என்று எங்களுக்கு தெரியும்” என போராட்டக்காரர்கள் தரப்பில் கூறிவரும் நிலையில் இதை எதிர்கொள்ள போலீஸார் முழு முயற்சியில் இறங்கி வருகின்றனர்.

போட்டிக்கு எதிராக போராடும் அனைத்து அமைப்புகளுடனும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நீங்கள் மைதானத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி அளிக்கிறோம். உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் என போலீஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர். அதன்படி ஆர்ப்பாட்டம் ஒரு புறம் நடந்தாலும் நினைத்ததை சாதிக்க இளைஞர் பட்டாளம் நாளை ஸ்டேடியத்தில் முயற்சிப்பார்கள் என உளவுத்துறை கருதுகிறது.

மைதானத்துக்குள் எந்தப் பொருட்களையும் எடுத்து வரக்கூடாது என கிரிக்கெட் சங்கம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. மைதானதுக்குள் கருப்புச் சட்டை போட்டு வரக்கூடாது, செல்போன், தண்ணீர் பாட்டில், பதாகைகள், குடை, பேனர்கள், கொடிகள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடியை கொளுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலோ, மைதானத்திற்குள் பொருட்களை வீசினாலோ உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என மைதான நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் கிரிக்கெட்டை பார்க்க வருபவர்களில் யார் ரசிகர்? யார் உணர்வாளர்? என்ன செய்யப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஐந்து நிமிடம் மேட்ச்சை நிறுத்தினால் கூட அது தேசிய அளவில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x