Published : 09 Apr 2018 03:34 PM
Last Updated : 09 Apr 2018 03:34 PM

அண்ணா பல்கலை. துணைவேந்தர் விவகாரம்: வரும் 18-ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி தேமுதிக கண்டன பேரணி

 அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமனம் செய்ததை ஆளுநர் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் ஏப்ரல் 18-ம் தேதி தேமுதிக ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணி நடத்தும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,“கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட சுந்தர்பிச்சை மற்றும் இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் போன்ற தமிழர்களின் அறிவும், திறமையும் உலகளவில் உச்சத்தில் இருக்கின்ற சூழ்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழர் அல்லாமல் கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமனம் செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் திறமைகளையும், உணர்வுகளையும், உரிமைகளையும் பறிப்பதாகவே உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி முடிவடைந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, பல ஊழல் புகார்களால் 23 மாதங்களாக நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், தேர்வுக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று பேர் பட்டியலில் ஒருவரை நியமனம் செய்ய 2017 ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக இருந்த வித்தியாசாகர் ராவ் மறுத்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் கலைக்கப்பட்டது. மீண்டும் முன்னாள் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் துணைவேந்தர் தேர்வு குழு அமைக்கப்பட்டு, மூன்று பேர் அடங்கிய பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பேராசிரியர்கள் உட்பட மொத்தம் 170 பேர் இந்த துணைவேந்தர் பதவிக்காக விருப்பம் தெரிவித்து, விண்ணபித்து இருந்தனர். இதில் விதிகளின் அடிப்படையில் படிப்படியாக எண்ணிக்கை குறைக்கப்பட்டு, இறுதியில் பேராசிரியர்கள் தேவராஜன், எம்.கே.சூரப்பா, பொன்னுசாமி ஆகியோருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. எந்த அடிப்படையில் 170 பேர் விண்ணப்பங்களில் மூன்று பேருடைய விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற விவரங்களை ஆளுநர் மாளிகையில் வெளியான செய்திக்குறிப்பில் வெளியிடப்படவில்லை.

மேலும், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட மூன்று பேரில் எம்.கே.சூரப்பா தான் தகுதியானவர் என்பதை தமிழக ஆளுநர் எவ்வாறு முடிவு செய்தார் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் பல பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பழமை வாய்ந்ததும், பெருமை வாய்ந்ததும் ஆகும். அதேபோன்று தமிழர்களின் மிகப்பெரும் அடையாளமாகவும் இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கின்றது.

ஏற்கெனவே நீண்ட நெடுங்காலமாக காவிரி நீர் பிரச்சினையால், தமிழகம், கர்நாடக மாநிலங்களின் ஒற்றுமை சிதைந்துள்ள சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரை துணைவேந்தராக நியமனம் செய்யாமல், கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமனம் செய்திருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாவதுடன், காவிரி மட்டுமல்ல எதுவாக இருந்தாலும் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே மத்திய அரசும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆளுநரும் எடுப்பார்கள் என்பதையே தெள்ளத்தெளிவாக காட்டுகின்றது. எனவே சூரப்பாவின் துணை வேந்தர் நியமனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்.

இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டால் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதிஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணி நடத்தப்படும்” என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x