Published : 09 Apr 2018 03:16 PM
Last Updated : 09 Apr 2018 03:16 PM

ஜாடிக்கேற்ற மூடி என்பது முதுமொழி; மோடிக்கேற்ற எடப்பாடி என்பது புதுமொழி: ஸ்டாலின்

தமிழகத்துக்கு துரோகமிழைப்பதில் ‘மோடிக்கேற்ற எடப்பாடி’ என்ற புதுமொழி உருவாகியிருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் இன்று (திங்கள்கிழமை) தஞ்சாவூர் மாவட்டம், புத்தூர் பகுதியில் விவசாயிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், “காவிரி உரிமை மீட்புப் பயணத்தினால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மூலமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கீம் என்றால் என்ன என்று அகராதியை எடுத்துப் பார்த்தாலே தெரியும். ஆனால், மத்திய அரசு தூங்குவது போல நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எழுப்ப முடியாது. அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு அடிபணிந்து எடுபிடி வேலை செய்பவராக தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

“ஜாடிக்கு ஏற்ற மூடி”, என்று ஒரு முதுமொழி உண்டு. இப்போது, “மோடிக்கேற்ற எடப்பாடி”, என்ற புதுமொழி உருவாகியிருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய தூரோகத்தை தொடர்ந்து இழைத்து வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில், கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல், நீங்கள் அனைவரும் பங்கேற்று இருப்பதைக் கண்டு பெருமையடைகிறேன்.

வரும் 12 ஆம் தேதி, இந்தியாவின் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகின்ற நேரத்தில், அவருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தினை நடத்துவதென எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து இருக்கிறோம். தமிழ்நாடு ஒரு துக்க நாள் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு, அதை வெளிப்படுத்தும் வகையில் அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும். அதுமட்டுமல்ல, அனைவரும் கருப்புச் சட்டை, கருப்புப் புடவை அணிந்து நம்முடைய உணர்வை வெளிப்படுத்த வேண்டும். ஒருவேளை கருப்பு உடை இல்லாதவர்கள், கருப்பு ரிப்பன் குத்திக் கொண்டு நமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு அனைவரும் பச்சைத் துண்டுகளைப் போட்டிருப்பதால், தமிழ்நாடே பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. அதுபோலவே, 12 ஆம் தேதி தமிழ்நாடே கருப்பு தினமாக காட்சியளிக்க வேண்டும்” இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x