Published : 09 Apr 2018 08:01 AM
Last Updated : 09 Apr 2018 08:01 AM

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பிரேமலதா பங்கேற்பு: செய்தியாளர்கள் மீது தேமுதிகவினர் தாக்குதல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டம் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடைபெறும் போராட்டத்தில், தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் மக்கள் நேற்று 56-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். ஆலையை மூட வலியுறுத்தி மீளவிட்டான், பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரபேரி, தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மடத்தூர், தபால்தந்தி காலனி மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா, இளைஞரணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் நேற்று குமரெட்டியாபுரம் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அங்கு பிரேமலதா பேசும்போது, “இங்கு நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரை சென்னைக்கு கொண்டுசென்று, என்ன கனிமங்கள் கலந்துள்ளன, குடிக்க உகந்ததா என தனியார் மூலம் ஆய்வு செய்து தெரிவிக்க இருக்கிறோம்” என்றார் அவர்.

பிரேமலதா பேசும்போது, குமரெட்டியாபுரம் போராட்டத்தை தங்களது தொலைக்காட்சி மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறினார். மேலும், தாம் இங்கு வந்திருப்பதால் மட்டுமே ஊடகங்கள் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

3 கேமராக்கள் உடைப்பு

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த செய்தியாளர்கள், பிரேமலதாவிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். அவர் அங்கிருந்து புறப்படவே, செய்தியாளர்கள் மீது தேமுதிகவினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 3 கேமராக்கள் உடைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில், சிப்காட் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பிரேமலதா, சுதீஷ் மற்றும் தேமுதிக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x