Published : 09 Apr 2018 07:41 AM
Last Updated : 09 Apr 2018 07:41 AM

மெரினாவில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவுடன் 36,806 ச.மீட்டரில் ஜெ. நினைவிட வளாகம்: தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்து உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடப் பகுதியில் 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைய உள்ளது. அதில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தில் ரூ.50 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் பொதுப்பணித் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டு, ரூ.43 கோடியே 63 லட்சத்துக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நினைவிடம் அமையும் பகுதி, கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டிருந்த கடலோர ஒழங்குமுறை மண்டல அறிவிப்பாணையின்கீழ் வருகிறது. அதனால் அந்த அறிவிப்பாணையின் கீழ் அனுமதி கோரி பொதுப்பணித் துறையின் கட்டிடம் மற்றும் கட்டுமான கோட்ட செயற்பொறியாளர், சிஎம்டிஏ-விடம் (மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையமாக செயல்படுகிறது) மனு அளித்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் 36,806 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 5,571 சதுர மீட்டரில் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. மேலும் 1,927 சதுர மீட்டரில் வாகன நிறுத்தம், 9,700 சதுர மீட்டரில் நடைபாதைகள், 560 சதுர மீட்டரில் குடிநீர் வசதி, 9 ஆயிரம் சதுர மீட்டரில் செடிகள், புற்களைக் கொண்ட பசுமைப் பகுதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. பிற்கால தேவைக்காக 10,048 சதுர மீட்டர் காலி இடமும் உள்ளது.

அந்த வளாகத்தில் 1,260 சதுர மீட்டர் பரப்பளவில் நினைவிடம் அமைய உள்ளது. அது 15 மீட்டர் உயரத்தில் இருக்கும். மேலும் அந்த வளாகத்தில் தலா 1,300 சதுர மீட்டர் பரப்பளவில் வளைவு வடிவிலான அருங்காட்சியக கட்டிடமும், அறிவுசார் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விண்ணப்பித்தது உண்மைதான் என்றும் அதற்கு அனுமதி கிடைத்துவிட்டது என்றும் தெரிவித்தனர்.

அனுமதி கிடைத்தது எப்படி?

பொதுப்பணித் துறையின் விண்ணப்பத்தை பரிசீலித்த சிஎம்டிஏ, திட்டத்துக்கு அனுமதி வழங்கலாம் என்று மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த ஆணையமும் நினைவிடம் அமைக்க கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது.

இது தொடர்பாக மாநில சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

அனுமதி கோரி பொதுப்பணித் துறை அளித்த விண்ணப்பத்தை சிஎம்டிஏ பரிசீலித்து, திட்டப் பகுதியானது ஏற்கெனவே கட்டுமானம் செய்யப்பட்ட பகுதிக்குள் வருவதாலும், அந்த இடம் ஏற்கெனவே அரசால் நினைவிடமாக அறிவிக்கப்பட்ட பகுதி என்பதாலும் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் நாங்கள் அனுமதி வழங்கி இருக்கிறோம்.

சென்னை கடற்கரை பகுதியில், திட்டத்துக்கு அனுமதி கோரும் காலத்தில் அந்த இடம் தமிழக அரசால் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறதோ அதன் அடிப்படையில் கடலோர ஒழங்குமுறை மண்டல விதிகளின் கீழ் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. தற்போது அந்த இடம் நினைவிடமாக வகைப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு நினைவிடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நினைவிட திட்டத்துக்கு சிஎம்டிஏவிடம் உரிய அனுமதி பெற வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடாது. இடிக்கப்படும் கட்டுமானக் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். அங்கு உருவாகும் கழிவுநீர், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 நிபந்தனைகளின் அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x