Published : 06 Apr 2018 01:51 PM
Last Updated : 06 Apr 2018 01:51 PM

முதியவர் உடலைப் புதைக்க குப்பை வண்டியில் கொண்டுசென்ற விவகாரம்: வேலூர் ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

வேலூர் சோளிங்கரில் இறந்து போன முதியவர் உடலை புதைக்க குப்பை அள்ளும் வண்டியில் (ரிக்‌ஷாவில்) கொண்டு சென்றது குறித்து மாநில மனித உரிமை ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (70). நன்றாக வசதியுடன் வாழ்ந்தார். நான்கு பிள்ளைகளுக்கு தகப்பனான அவர், வயதாகி மனைவியும் மறைந்ததால் பிள்ளைகளால் கைவிடப்பட்டு சோளிங்கர் பகுதியிலேயே பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்த ராஜாராம்  உடல்நலக் குறைவு காரணமாக யாரும் கவனிப்பாரின்றி கடந்த 27-ம் தேதி சாலையில் கவனிப்பாரற்று உயிரிழந்தார். அவரது பிணத்தை கைப்பற்றிய சோளிங்கர் போலீஸார் அவரது மறைவு குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். அவரது உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரணை நடத்தினர்.

ராஜாராம் உடலை அனாதைப் பிணமாக அடக்கம் செய்துகொள்ளுங்கள் என அவரது உறவினர்கள் கூறியதால், அனாதைப் பிணமாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராஜாராம் உடலை சோளிங்கர் பேரூராட்சி ஊழியர்களிடம் அடக்கம் செய்ய ஒப்படைத்தனர்.

முதியவர் ராஜாராம் உடலைப் பெற்ற பேரூராட்சி ஊழியர்கள் அவரது உடலை குப்பை அள்ளும் ரிக்‌ஷா வண்டியில் திறந்த நிலையில் அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு சாலையில் எடுத்துச் சென்றனர்.

சோளிங்கர் அரசு மருத்துவமனையில் இருந்து சுடுகாடு வரை உடலைக் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பேரூராட்சியின் மனிதாபிமானமற்ற இந்த செயலைப் பலரும் கண்டித்தனர். இது ஊடகங்களில் செய்தியானது. பேரூராட்சியில் ஒரு அமரர் ஊர்தி கூடவா இல்லாமல் போனது என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் பத்திரிகைகளில் வெளியான செய்தியை ஹு அடிப்படையாக வைத்ட்மாநில மனித உரிமை ஆணையம் வழக்காக எடுத்துள்ளது.

மாநில மனித உரிமை ஆணையம் குப்பை வண்டியில் முதியவர் பிணத்தை எடுத்துச் சென்றது குறித்து விளக்கம் அளிக்கும்படி வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேருராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x