Published : 06 Apr 2018 01:39 PM
Last Updated : 06 Apr 2018 01:39 PM

டெல்டா பகுதியில் அனைத்துக் கட்சிகளின் காவிரி மீட்புப் பயணம்: ஸ்டாலின் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த அடுத்தகட்டப் போராட்டமாக காவிரி மீட்புப் பயணத்தை டெல்டா பகுதிகளில் நடத்த முடிவெடுத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்ணா அறிவாலயத்தில் காவிரி போராட்டம் குறித்த அடுத்தகட்டப் போராட்டம் பற்றி முடிவெடுக்க திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''காவிரி மீட்புப் பயணத்தை டெல்டா பகுதிகளில் நடத்துவதாக முடிவெடுத்ததை அடுத்து எப்படி நடத்துவது என்பதைப் பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

டெல்டா பகுதி முழுமையாக காவிரி மீட்புப் பயணம் நடத்திட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அத்தனை பேரும் முடிவு செய்து முழுமையாக நடத்திட வேண்டுமானால் இரண்டு குழுக்களாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதும் பயணம் செய்வது என்று முடிவு செய்துள்ளோம்.

அதனடிப்படையில் திருச்சி முக்கொம்பிலிருந்து ஒரு குழு பயணம் தொடங்குகிறது. இன்னொரு குழு வரும் 9-ம் தேதி அரியலூரிலிருந்து பயணத்தைத் தொடங்குகிறது. இந்த நடைபயணத்தில் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்லாமல், இயக்கங்களின் முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள்.

இந்த இரண்டு நடைபயணப் போராட்டத்தையும் கி.வீரமணி தொடங்கி வைப்பார். 1989-ல் கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடைச்சட்டம், அதை நீர்த்துப் போகும் வகையில் உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை வருகிற 16-ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் தலைமையில் நடத்த உள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்கிற நம்பிக்கையில் தான் போராட்டம் நடத்துகிறோம். அது நடக்காவிட்டால் மீண்டும் அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராக இருக்கிறோம். ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று சொல்லவில்லை. அதை நடத்துகிறவர்கள் அதன் உணர்வை புரிந்து அதற்கேற்ப நடத்த வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x