Published : 06 Apr 2018 01:16 PM
Last Updated : 06 Apr 2018 01:16 PM

ஆளுநரின் அதிகார ஆதிக்கம் தமிழக மக்களுக்கு எதிராகவே இருக்கிறது: வைகோ குற்றச்சாட்டு

ஆளுநரின் அதிகார ஆதிக்கம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராகவே இருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் ராஜாராம் கடந்த 2016-ம் ஆண்டு மே 26-ம் தேதி ஓய்வு பெற்றார். தமிழகத்தின் முக்கியத்துவம் பெற்ற இத்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு கடந்த 23 மாதங்களாக துணைவேந்தராக எவரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழக பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். முக்கிய முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் நிர்வாகப் பணிகள் முடங்கின.

தமிழக அரசு இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அலட்சிப் போக்குடனேயே இருந்தனர். துணைவேந்தர் பணி நியமனங்களில் புரையோடிப்போன ஊழல் நாடறிந்த ரகசியமாகும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய மூன்று முறை தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு, மிகுந்த காலதாமதமாக தற்போது துணைவேந்தர் பொறுப்புக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.கே.சூரப்பாவை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதியும், திறமையும், அனுபவமும் வாய்ந்த பேராசிரியர் பெருமக்கள் பலர் விண்ணப்பித்ததை அலட்சியப்படுத்திவிட்டு, ஆளுநர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை அமர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் பேராசிரியர் சூர்ய நாராயண சாஸ்திரியை ஆளுநர் தேர்வு செய்ததற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த நியமனத்தை ரத்து செய்துவிட்டு, தேர்வுக்குழு பரிந்துரைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் வலியுறுத்தினர்.

ஆனால், ஆளுநர் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஆந்திராவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் சூர்ய நாராயண சாஸ்திரியை நியமனம் செய்தார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமித்து இருக்கிறார்.

இவற்றை நோக்கும்போது ஆளுநரின் அதிகார ஆதிக்கம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராகவே இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

அரசியல் சட்ட மரபுகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில், மாநில அரசின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, மத்திய அரசின் முகவராக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் தொடர்ந்து ஆளுநர் செயல்படுவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து வரும் மத்திய அரசின் பச்சைத் துரோகத்திற்கு எதிராக தமிழகமே கொந்தளித்துப் போராட்டக் களத்தில் ஈடுபட்டு இருக்கிறது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து இருப்பதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தமிழக கல்வியாளர்களையே துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்க வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x