Published : 06 Apr 2018 11:19 AM
Last Updated : 06 Apr 2018 11:19 AM

‘‘அண்ணா பல்கலை துணைவேந்தரை நியமித்தது ஆளுநர்: தமிழக அரசுக்கு தொடர்பில்லை’’ - ஜெயக்குமார் விளக்கம்

ஆளுநர் தன் அதிகார வரம்புக்குட்பட்டே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமித்திருப்பதாகவும், இதில் தமிழக அரசுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, “அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் தன் அதிகார வரம்புக்குட்பட்டு துணைவேந்தரை நியமித்திருக்கிறார். இதற்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தமிழர்கள் அறிவாளிகள் என்பதை உலகம் அறியும். தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. நாட்டிலேயே அறிவுசார் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும். காவிமயத்துக்கு தமிழகத்தில் எந்தவொரு வேலையும் கிடையாது. காவிமயம் குறித்து ஐயம் கொள்ள வேண்டாம்.

ஐபிஎல் போட்டிகளை மாநில அரசு நடத்தவில்லை. தனியொரு அமைப்புதான் நடத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என விவசாயிகளும், ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிப்பான மனநிலையில் உள்ளது. அதனால், தமிழகத்தின் உணர்வை புரிந்து ஐபிஎல் நடத்தலாமா வேண்டாமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் பங்கிட்டுக் குழு அமைப்பதுதான் ‘ஸ்கீம்’ என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால், ஆங்கிலம் தெரியாமல் மத்திய அரசு ஆலோசனைக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது வரும் 9-ம் தேதி நல்ல முடிவு எடுக்கப்படும் என நூறு சதவீதம் நம்பிக்கை உள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழர்களின் முதுகில் குத்தியது திமுக. ஆனால், சட்டப்போராட்டம் நடத்தியது அதிமுக. போராட்டம் ஜனநாயக வழியில்  இருக்க வேண்டும். திமுக உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்துகிறது”

என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x