Published : 06 Apr 2018 09:45 AM
Last Updated : 06 Apr 2018 09:45 AM

அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். சூரப்பா துணைவேந்தராக பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.

புதிய துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக கடந்த 2009 முதல் 2015 வரை 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உலோக பொறியியல் துறையில் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ள அவர், 30 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் மட்டும் 24 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்திய நேஷனல் அகாடமி, இந்திய நேஷனல் இன்ஜினீயரிங் அகாடமி உறுப்பினரான சூரப்பா, 150-க்கும் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x