Published : 06 Apr 2018 09:11 AM
Last Updated : 06 Apr 2018 09:11 AM

அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த மே 3-க்குள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவு கள் மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்த மே 3-ம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்த வேண்டி, கடந்த ஆண்டு மே மாதம் மற்றும் அக்டோபர் மாதத்தில் இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன. அந்த அரசாணைகள் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தப்படும்.

அதாவது, அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் உள்ள மனைகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்னர் விற்பனை ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பின், அவற்றை வரன்முறைப்படுத்துவதற்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

சம்பந்தப்பட்ட மனையின் ஆவணங்கள், வரைபடங்களோடு இணையதளத்தில் வெளியிடப்பட்டதற்கு பின்னர், அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவில் உள்ள தனிநபர்களின் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு, www.tnlayoutreg.in என்ற இணையதளம் மூலம் மே 3-ம் தேதிக்குள் விண்ணப்பித்து, அதுகுறித்த ஆவணங்களை மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் மே 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண் டும்.

அதை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலித்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு அனுப்பும். அங்கு மனை அமைந்துள்ள மனைப் பிரிவின் அமைப்பு தொடர்பான கொள்கை ஒப்புதல் அளிக்கப்படும். அதன்பிறகு கோப்புகள் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து மனைகளும், மனைப் பிரிவுகளும் வரன்முறை செய்யப்படும்.

பொதுமக்கள் இந்த வரன் முறைப்படுத்தும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு திறந்த வெளி கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x